சர்ச்சைக்குரிய அதிகாரியை இராணுவ தளபதியாக்க நினைக்கும் மைத்திரியின் மகள்

Report Print Jeslin Jeslin in அரசியல்
723Shares

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

தற்போது இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய இராணுவத் தளபதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மைத்திரியின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய முடிவு எடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிப் போர் காலக்கட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்துள்ளார்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று ஐ.நாவினாலும், மனித உரிமை அமைப்புகளாலும் அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டால், ஐ.நா அமைதிப்படைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் பாதிக்கப்படும் என்றும், அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்புகளும் நெருக்கடிக்குள்ளாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.