அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் 2019ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் கோத்தபாயவின் பெயர் இடம்பெறவில்லை. தற்பொழுது வெளியாகியுள்ள பட்டியல் மார்ச் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலத்துக்குரிய பெயர்ப்பட்டியல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெயர்ப்பட்டியலில் பெயர் வெளிவரும் வரையில், கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டதாக தகவல் வெளியிடுவது, அமெரிக்க சட்டப்படி சட்டமுரணானது என்பதனால் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது குறித்து எந்த அறிவிப்பையும் விடுக்காதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இயங்கும் பி.பி.சி. நிறுவனமும் இது பற்றிய தகவல்களை வெளியிடுமாறு விடுத்த வேண்டுகோளை, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் அரசியல் யாப்பின்படி இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அமெரிக்கா அவரது பெயரை பிரஜாவுரிமையிலிருந்து நீக்கியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென அரசியல் தரப்பில் கூறப்படுகின்றது.