ஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி! கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தன்னுடைய ஆதரவு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் பௌத்த மத குருக்களைச் சந்தித்து கோத்தபாய ஆசிபெற்றுவருகின்றார். இதற்கிடையில் மக்கள் சந்திப்புக்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதுடன், ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் மேல் மாடியில் உள்ள ஜனாதிபதி அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள், மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா? என்று அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரின் கேள்வியால் கடும் கோபமடைந்த, மைத்திரிபால சிறிசேன உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி, இந்த நாட்டு பொதுமக்களின் அபிலாஷைகளை நன்கு அறிந்த நேர்மையான ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித் பிரேமதாச மாத்திரமே என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

இதன் மூலம், ஜனாதிபதி மைத்திரியின் ஆதரவு கோத்தபாயவிற்கு இல்லை என்பதோடு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு உண்டு என்பதை வெளிப்படையாக உணர்ந்து கொள்ள முடிவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers