பிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்! முழுமையாக ஒப்புக்கொண்ட மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொய்கள் என்றும் மெய்யாவதில்லை. உண்மைகள் என்றைக்கும் உறங்குவதில்லை என்பது பொதுவான வாக்கு. நிகழ்காலத்தில் உண்மைகள் என்றைக்குமே உறங்கியதில்லை என்பதற்கு இலங்கை அரசியல் களநிலவரத்தை முழுமையாக எடுத்துச் சொல்ல முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் போர் நகர்வுகளை பயங்கரவாத செயற்பாடுகளாக சித்தரித்து உலக அரங்கில் அவர்களை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து உள்நாட்டில் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்து சாட்சியமற்ற போரை நிகழ்த்தியவர் இப்போதெல்லாம் புலிகளின் பேச்சை எடுக்காமல் அரசியல் மேடைகளில் பேசாமல் இறங்குவதில்லை.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் மகிந்த முதல் இராணுவத் தளபதி உட்பட அனைத்து தரப்பினரும் பேசினர்.

புலிகள் இதுபோன்ற மக்களை இலக்கு வைத்த தாக்குதல்களை நடத்தியதில்லை என்றும், ஒரு நேரத்தில் அடுத்தடுத்த தாக்குதல்களையும் அவர்கள் மேற்கொண்டதில்லை என்றனர். இதற்கு ஒருபடி மேலே சென்று புலிகளின் தாக்குதல்களுக்கு ஒரு அரசியல் நோக்கம் மற்றும் இலக்கு இருந்தது. அதற்காகத்தான் அவர்கள் தாக்குதல்களைத் தொடுத்தார்கள் என்றனர். புலிகளின் அரசியல் போராட்டத்தை ஒப்புக் கொண்டதற்கு இது மிகப்பெரும் அங்கிகாரமாக பார்க்க முடியும்.

இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் போதைப் பொருட்களைக் கடத்தியே ஆயுதப் போராட்டத்தை நடத்தினார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்க, கொழும்பு அரசியல் தலைமைகள் உட்பட பலர் அதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

புலிகளும் அதன் தலைமையும் போதைப் பொருளுக்கு எதிரானவர்கள் என்றும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களை புலிகள் பாரபட்சமின்றி தண்டித்தனர் என்ற உண்மையையும் எடுத்தியம்பினர்.

எவ்வாறாயினும் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்க்கும் மனநிலையிலிருந்து தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் சரி மக்களும் சரி இன்றளவும் வெளிவரவில்லை.

ஆனால், இன்றைய தினம் அதையும் தகர்த்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், இன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச. இரண்டு முறை ஜனாதிபதியாக, பிரதமராக எதிர் கட்சி தலைவராகவும் இருந்தவர், முப்படைகளின் தளபதியாகவும் இருந்த மகிந்தவின் வாயால் உண்மையை உரக்கச் சொல்ல வைத்திருக்கிறது காலம்.

காலம் எத்தனை அற்புதமானது என்பதை இன்றைய தினம் உணர்த்தியிருக்கிறார் மகிந்த. தங்களின் வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்தவர் தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.

உண்மையில் 2005ஆம் ஆண்டு புலிகளின் தலைமை தேர்தலை புறக்கணிக்குமாறு அறிவித்ததாகவும் அதனால் ரணில் தோல்வியை சந்தித்தார் என்றும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இதற்கு ஒருபடி மேல் சென்ற ரணில் தரப்பு, புலிகளுக்கு மகிந்த தரப்பினர் பணம் கொடுத்தே இந்த தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.

எனினும் இதற்கான ஆதாரங்கள் எதனையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

ரணில் தரப்பினர் சொல்லும் குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் ஏற்கும் நிலையில் இல்லை. ஆனால், அன்றைய தினம் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் மகிந்த தரப்பு தோல்வியடைந்திருக்கும் என்ற உண்மையையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இந்நிலையில் தங்களின் தலைமையாக தங்களின் பேரம் பேசும் சக்தியாக புலிகளை தமிழ் மக்கள் கருதியிருந்தனர். இதனால் புலிகளின் அறிவிப்பை தலைமீது ஏற்றனர். அதனால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டது.

இன்று புலிகளின் அன்றைய அறிவிப்பை மகிந்த ராஜபக்ச நினைவுபடுத்தியிருக்கிறார். இன்று நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றிய மகிந்த,

ரணில் அரசை இனியும் நம்பி ஏமாறுவதற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்லர். நான்கு ஆண்டுகளில் தீர்வுத் திட்டம் தொடர்பில் எதனையும் செய்து முடிக்காத இந்த ரணில் அரசா அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இனி வழங்கப் போகின்றது?

சாக்குப்போக்குக்குப் புதிய அரசமைப்பு வரைவை மட்டும் சமர்ப்பித்து விட்டு குற்றங்களை எம் மீது சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை.

அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்றால், ரணில் அரசுக்கு எதிராகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

அதற்காக 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்ததைப் போன்று புறக்கணிக்க வேண்டும் என்று கோரவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும். போரின்போது உயிரிழப்புக்கள் நடப்பது வழமை. அதற்காக எம்மைக் கொலைகார அரசு என்ற குற்றம் சுமத்தி ரணில் அரசு பரப்புரை செய்து வருகின்றது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி - உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற மனிதப் படுகொலை யாருடைய ஆட்சியில் இடம்பெற்றது என்பதை ரணில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

ஆக, புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இன்று சிங்கள மக்களுக்கும் உலகத்திற்கும் மகிந்த ராஜபக்ச உறக்கச் சொல்லியிருக்கிறார்.

புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று மேடைகளில் பேசியவர்கள், புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று ஐ.நா வரை சென்று சொன்னவர்கள், புலிகளின் சொல்வதை தமிழ் மக்கள் ஏற்றார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தங்களின் தலைமை யார்? அவர்கள் எதைச் செய்கிறார்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்பதை தென்னிலங்கை ஏற்றுக்கொள்ளும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

காலம் எப்போதும் எதையும் அழிந்து போகச் செய்ததில்லை. காலம் ஆகச் சிறந்த வரலாற்றுச் சிற்பி. உண்மைகளை ஏதோவொரு வழிகளில் வெளிக் கொண்டுவந்தே தீரும். இன்று புலிகளை அழித்ததாக பிரபாகரனைக் கொன்றதாக சொன்ன அதே மகிந்த, புலிகளை நம்ப வேண்டாம், அவர்கள் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் என்று சொன்னவர்,

புலிகள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக வைத்திருந்தனர் என்பதை உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருந்த மகிந்த இன்று பிரபாகரன் 2005ஆம் ஆண்டு சொன்னதைச் செய்யச் சொல்கிறார்.

எனில் தான் சொன்னதை கேட்கும் செய்யும் தன்னை நம்பிய மக்கள் கூட்டத்தை பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் ஆயுத முனையில் யுத்த பிணையக்கைதிகளாக வைத்திருப்பாரா? எல்லாவற்றுக்கும் மகிந்தவே விடையளித்துவிட்டார்.

Latest Offers