வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே ஆதரவு! எம்.கே.சிவாஜிலிங்கம்

Report Print Thileepan Thileepan in அரசியல்
27Shares

வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தான் எமது ஆதரவு யாருக்கு என்பது குறித்து வெளிப்படுத்துவோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

இலங்கை எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் மாதம் சந்திக்க இருக்கின்ற நிலையில் இது தொடர்பாக தலைமைக் குழுக் கூட்டத்தில் 5 மணிநேரத்திற்கு மேலாக ரெலோ ஆராய்ந்துள்ளது.

ஏனைய விடயங்கள் தொடர்பிலும் தலைமைக் குழுக் கூட்டத்தில் தொடர்ந்து கலந்துரையாட இருக்கின்றோம். இலங்கை அரச அதிபர் தேர்தல்களில் 7 முடிவடைந்த நிலையிலும் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இந்த தேர்தலில் எமக்கு ஏதாவது கிடைக்குமா என்ற அடிப்படையில் பயன்படுத்த வேண்டிய நிலைப்பாடு இருக்கின்றது.

ஆகவே, இந்த விடயம் தொடர்பான ஒரு இறுதித் தீர்மானத்தை இந்த மாத இறுதியில் அறிவிக்க இருக்கின்றோம்.

பிரதான கட்சிகள் இரண்டு தான் இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னனியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் எவ்வாறு அமைக்கின்றன என்பதைப் பொறுத்து தான் எமது முடிவுகளை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் உள்ளது. நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்து அதனை முறைப்படி அங்கத்துவ கட்சிகளுடன் பேசி முடிவெடுப்பது. அல்லது நாங்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு சாதகமாக இருக்கப் போகிறார்களா அல்லது எதிராக இருக்கப் போகின்றார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.