கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகும் கோத்தபாய? தனி ஈழத்தை ஸ்தாபிக்க துடிக்கும் விக்னேஷ்வரன்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

கிழக்கு மாகாண மக்களின் பூரண ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். விக்னேஷ்வரன் என்பவர் யார் என்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள் என்றே நான் கருதுகிறேன். அவர் ஒரு நீதியரசர். நீதியை நிலைநாட்ட முன்னின்று சேவையாற்றிய இவர், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடும்போது, அவர் கடந்த காலங்களில் தனது சேவையை முறையாக ஆற்றினாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

அவர், தமிழர்களுக்கு கூறிவரும் கருத்துத்தான் என்ன? பலவீனமான அரசாங்கமொன்றையும் தனி ஈழத்தையும் ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் அவரது நிலைப்பாடாக இருக்கிறது.

30 வருடகாலமாக யுத்தத்தை மட்டுமே அனுபவித்து வந்த மக்கள், அதிலிருந்து விடுபட்டு, அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கவும் சுதந்திரமாக வாழவும் வழியேற்படுத்திக்கொடுத்தது மஹிந்த ராஜபக்சதான் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.

எமது முப்படையினர் உயிர் தியாகங்களை செய்து பெற்றுக்கொடுத்த இந்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, மீண்டும் தமிழர்களை யுத்த காலத்திற்கு அழைத்துச்செல்லும் விக்னேஷ்வரன் போன்றோர் விடயத்தில் ஏன் சட்டம் நிலைநாட்டப்படுவதில்லை என்றும் கேட்க விரும்புகிறேன்.

அவர், ஒரு இனத்தையே குழப்பும் வகையில்தான் தற்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை விக்னேஷ்வரன் போன்றோர் வெளியிடுவது உண்மையில் வெட்கத்துக்குரியது.

தமிழர்கள் எம்முடன் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தமிழர்களில் பலர் தற்போது தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பாக அதிருப்தியிலேயே காணப்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் விக்னேஷ்வரன் தரப்பினர் இத்தனை வருட காலத்தில் தமிழர்களுக்காக செய்ததுதான் என்ன? எனவே, மக்களை தேவையில்லாமல் குழப்பக்கூடாது என்று இவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு, எவ்வாறான சவால்கள் வந்தாலும் கிழக்கிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை வெற்றியடைச் செய்வோம் என்பதையும் நான் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers