தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே மகிந்த நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு

Report Print Sujitha Sri in அரசியல்
521Shares

தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே மகிந்த ராஜபக்ச நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு உள்ளது. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு தான் அதிகமான வாக்கு வங்கியுள்ளது. கோத்தபாய ராஜபக்சவுக்கோ அல்லது சமல் ராஜபக்சவிற்கோ வாக்குவங்கிகள் இல்லை. மகிந்த ராஜபக்ச யாருக்கு ஆதரவளிக்கின்றாரோ அவருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

கடந்த முறை 60 வீதமான சிங்கள் மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்திருந்தனர். 40 சதவீதமானவர்கள் வாக்களிக்கவில்லை. 40 சதவீதத்தில் பத்து வீதமான சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க கூடும்.

அன்று கிறிஸ்தவ சிங்களவர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்கவில்லை. குறிப்பாக கொழும்பு, வத்தளை, நீர்கொழும்பு, புத்தளம். வென்னப்புவ, கந்தானை என பல பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்கவில்லை.

ஐ.தே.கவுக்குதான் வாக்களித்தனர். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. சிங்கள கிறிஸ்தவர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்க தயாராகவுள்ளனர்.

தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே மகிந்த ராஜபக்ச நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.

இந்தத் தருணத்தில் தமிழர்களாகிய நாம் சரியாக சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு அளிக்கப்படாவிடின் நாளை அவர்களிடம் சென்று எமது உரிமைகளை கேட்க முடியாது.

ஆபத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் கொழும்பு, வன்னி உட்பட பல இடங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் உள்ளனர்.

அதனை வரவேற்கின்றேன். கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் தமிழ் மக்கள் ஒரு அச்ச உணர்வில் இருப்பதாக கூறப்படுவதை ஒரு மாயையாக பார்க்கின்றேன்.

கடந்த அரசில் நான் அவருடன் நெருங்கி பழகியிருந்தேன். எளிமையான மனிதராகவே இருந்தார்.

யுத்தத்தை வெற்றிக் கொண்டதால் அவரை ஒரு மோசமான மனிதனாக பார்க்கும் மாயையே தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அவர் எளிமையானவர். தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக் கொடுப்பதிலும் முன்னுரிமையளித்தார். அவரைப் பற்றிய அச்சம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.