கோத்தபாய ராஜபக்சவிற்கு நாட்டை ஆட்சி செய்ய முடியாது! சரத் பொன்சேகா

Report Print Kamel Kamel in அரசியல்
381Shares

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என தாம் நினைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் நாட்டை பற்றி சிந்திக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக களமிறக்க வேண்டும்.

சிலர் சாரத்தை தூக்கிக் கொண்டு நான்தான் வேட்பாளர் என கூச்சல் போட்டாலும் அதனை நாம் கண்டுகொள்ள மாட்டோம்.

கோத்தபாய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ய பொருத்தமானவர் என நான் அன்றோ இன்றோ கருதியதில்லை.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமான ஒருவரை களமிறக்கினால் நிச்சயமாக தோல்வியைத் தழுவ நேரிடும், இது எதிர்த்தரப்பில் போட்டியிடுபவரது வெற்றி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

வாயில் வற்றாளை கிழங்கு நடும் ஒருவரை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கினால் தோல்வியடைய நேரிடும்.

நாட்டில் மிதக்கும் வாக்குகளே இம்முறை வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.