நாட்டைப்பொறுப்பெடுக்க நான் தயார்! சஜித் பிரேமதாச அறைகூவல்

Report Print Aasim in அரசியல்
176Shares

ராணுவ ரீதியான பாதுகாப்பின் மூலமாக மட்டும் எந்தவொரு நாட்டையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் அலுவிகாரேகம கம்உதாவ வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ராணுவ ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளினால் மட்டும் ஒரு நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. அதனுடன் பொருளாதார, சமூக, அரசியல் விடயங்களும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும்.

அவ்வாறு நாட்டை அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்கான ஆற்றல் என்னிடம் இருக்கின்றது. அந்த வகையில் நாட்டைப் பொறுப்பேற்க நான் தயாராக இருக்கின்றேன்.

தற்போதைய நவீன உலகின் வியாக்கியானங்களுக்கு ஏற்ப ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது ராணுவ ரீதியான பாதுகாப்பு மட்டுமன்றி, பொருளாதார, சமூக, அரசியல் பாதுகாப்பும் இணைந்ததே தேசிய பாதுகாப்பு என்று வரையறுக்கப்படுகின்றது.

1971 மற்றும் 88-89 காலப்பகுதியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பொருளாதார ரீதியான பாதுகாப்பு பொதுமக்களுக்கு கிடைக்காத காரணத்தினாலேயே பொருளாதாரத்தை மையப்படுத்திய கிளர்ச்சிகள் ஏற்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

அதே போன்று பொதுமக்களின் உரிமைகள், பிரச்சினைகள், வேதனைகளை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் அது தேசியப் பாதுகாப்பில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தான் பாதுகாப்புப் படையினரை குப்பை அள்ளவைத்து அவர்களின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அரசாங்கம் அதையெல்லாம் நிறுத்தி பாதுகாப்புப் படையினரை மரியாதை, கௌரவத்துடன் நடத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் மட்டும் அவர்களை ஈடுபடுத்தியுள்ளது என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.