ரணிலுக்கு 7 நாட்கள் கெடு! உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பறந்த எச்சரிக்கை கடிதம்

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக கட்சியின் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன்கூடிய மேற்படி கோரிக்கை கடிதத்தை கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீமும், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இணைந்து அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,

கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் மேற்படி கடிதம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் எங்களிடம் தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டி, கூட்டாக வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியும் என நம்புகின்றோம். எனவே, விரைவில் மக்கள் எதிர்பார்க்கும் வேட்பாளரை கட்சி அறிவிக்கும்.மாற்று நடவடிக்கையில் இறங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, "இன்னும் 7 நாட்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிட வேண்டும். உரிய வகையில் தேர்வு இடம்பெற வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்" என்று சஜித் ஆதரவு அணி உறுப்பினரான அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழு இன்று அலரிமாளிகையில் கூடியது. இதன்போது இவ்வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதித் வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.