அவசர கதியில் வேட்பாளரைத் தெரிவு செய்யும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை! அர்ஜுன ரணதுங்க

Report Print Aasim in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அவசர கதியில் தேர்வு செய்யும் அவசியம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த 2015ம் ஆண்டு நல்லாட்சிக்காக வாக்களித்த மக்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு மட்டுமே கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை நாம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

அதே போன்று பொதுமக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை எம்மால் நிறைவேற்ற முடியாமல் போனது. ஊழல் மற்றும் மோசடிக்காரர்கள், குற்றவாளிகளைத் தண்டிப்பதில் நாம் வெற்றி பெறமுடியாது போனது.

இவ்வாறான நிலையில் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மிக விரைவில் மாபெரும் அரசியல் கூட்டணியொன்று விரைவில் உருவாக்கப்படும். அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

என்னைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் வேட்பாளரை அறிவித்தால் கூடப் போதுமானது என்பதே எனது நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.