அதுரலிய ரதன தேரரின் சூழ்ச்சி! முன்னாள் அமைச்சர் காட்டம்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

அத்துரலிய ரதன தேரர் ஏற்பாடு செய்திருக்கும் பேரணியானது, தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நாடகமாகவும், சரிந்து கிடக்கும் தனது அரசியல் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுமேயாகும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர் தனது அரசியல் செல்வாக்கு இழந்த நிலையில் தனது அரசியல் இருப்பிடத்தை தக்க வைத்து கொள்ளுவதற்காக மேற்கொள்கின்ற நாடகங்களில் ஒன்றுதான் மட்டக்களப்பு மாவட்ட போராட்டமாகும்.

அத்துரலிய ரதன முஸ்லிம்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

இலங்கையில் இடம்பெற்று வந்த இன முரண்பாடு, ஆயுத ரீதியான போராட்டமாக மாறியமை தமிழ், முஸ்லிம் உறவில் வெகுவான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம் படுகொலைகள் போன்ற இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகளினால் இவ்விரு சமூகங்களின் உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது.

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கசப்புணர்வுகளும், முரண்பாடுகளும் காணப்பட்ட போதிலும் அண்மைக்காலங்களில் இவ்விரு இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பது போற்றத்தக்க வகையில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

இதனை சீர் குலைப்பதற்காகவேண்டி தீய சக்திகள் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக அத்துரலிய ரதன தேரர் ஏவப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் இன முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ஆதாயம் தேட அத்துரலிய ரதன தேரர் போன்றவர்கள் முனைகின்றனர்.

அத்துரலிய ரதன தேரர் கடந்த காலங்களில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மீது கூறிய கருத்துக்களை நாம் ஒவ்வொருவரும் மீட்டி பார்க்க வேண்டும். இவர் இந்த நாட்டில் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனங்களுக்கிடையில் முறுகளை ஏற்படுத்த விளைகிறார்.

அரசியல் வங்குரோத்து நிலையில் உள்ளவர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் துணையுடன், தமிழ், முஸ்லிம் மக்கள் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு இனவாத கருத்துக்களை விதைக்க வருகின்றவர்களை விரட்டியடித்து, தமிழ், முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கு தமிழ் சகோதரர்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.