குமார வெல்கம கூறும் அந்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?

Report Print Murali Murali in அரசியல்
358Shares

தான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பண்டாரகம மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இதனால் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்துகொண்டதாக சிலர் கூறிவருகின்றனர்.

எனினும், அவ்வாறான செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது. சமூக அக்கறையுடன் மாத்திரமே பிரதமருடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தேன்.

நான் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள மாட்டேன். நான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உரித்தான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்பவர் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படாதவராகவும், விமர்சனங்களை ஏற்பவரும் மற்றும் ஊடகவியலாளர்களை துன்புறுத்தாதவருமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய ஒருவராக இருந்த குமார வெலகம, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை பகிரங்கமாக எதிர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில், இதுவரையில் உத்தியோகபூர்வமாக இருவரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறியிலுள்ளது.

இவ்வாறான நிலையில், நாட்டின் எதிர்காலதலைவர் குறித்து குமார வெல்கம வெளியிட்டிருக்கும் கருத்து முக்கியத்துவம் பெற்றிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.