ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படும் பொன்சேகா? அமைச்சர் ரவியின் பேச்சால் சர்ச்சை

Report Print Murali Murali in அரசியல்

பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா என்பவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு பெரும் பலமாகும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரின் ஊடாகவே ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “அழுதுகொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் திரிவதனால் வெற்றி பெற முடியாது. எமது கட்சிக்கென்று சட்ட ஒழுங்குகள் காணப்படுகின்றன.

அதன்படி, வெற்றிபெறும் ஒருவரையே ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக முன்னிறுத்தும். சரத்பொன்சேகா என்பவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு பெரும் பலமாகும்.

அவரின் ஊடாகவே ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளப் போவதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விரைவில் ஜனாதிபதி தேர்தல்இடம்பெறும் என நம்பப்படும் நிலையில், பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பாளரை தெரிவு செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நான் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என அமைச்சர் சஜித் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியிருப்பது அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.