தமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறும் அநுரகுமார!

Report Print Rakesh in அரசியல்

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த, ஜே.வி.பியின் தலைவரும் 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கா தவறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் அநுரகுமார எந்தவொரு கருத்துக்களையும் வெளியிட்டிருக்கவில்லை.

இந்த விடயங்கள் தொடர்பில் அவரின் நிலைப்பாடு என்ன என்று அநுரகுமாரவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒன்றில் சாகடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம். சாகடிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பான விவரங்களை உறவினர்களுக்கு வழங்க வேண்டும்.

போர்க்காலத்தில் இராணுவத்தின் தேவைக்காக மக்களின் காணிகளை எடுத்தமை நியாயமானது. போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலைமையில், மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிக்கவேண்டும்.

அரசியல் கைதிகள் சந்தேகத்தில் கைதுசெய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், அவர்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கைதுசெய்யப்பட்டவர் குற்றவாளி என்றால் தண்டனை வழங்கலாம்.

குற்றமற்றவர் என்று இனங்காணப்பட்டால் அவர் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களை ஆண்டுக்கணக்கில் சிறைகளில் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அவரிடம் கேட்டபோது, பின்னர் பேசுவோம். வடக்கு மக்களும் ஆதரவு தரும் ஒரு கட்சியை தெற்கிலே உருவாக்குவோம். பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண்பதுதான் எங்கள் கடமை என குறிப்பிட்டுள்ளார்.