கொழும்பில் இரவு வேளையில் சஜித்துடன் திரண்ட 50 எம்.பிக்கள்! கலந்துரையாடியது என்ன?

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரரின் வீட்டில் ஒன்று கூடி கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நட்புறவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

கொழும்பு 7, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் இருந்து இந்த வீட்டில் நேற்றிரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்த கலந்துரையாடல் நள்ளிரவையும் தாண்டி நடந்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, தலதா அத்துகோரள, கயந்த கருணாதிலக்க, சாந்தி பண்டார, மொஹமட் ஹலீம் மற்றும் றிசார்ட் பதியூதீன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற குழு என்பன ஒன்றாக அமர்ந்து, கலந்துரையாடி துரிதமான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கோரி, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட மகஜர் சம்பந்தமாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது விரிவாக கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் 123 மாகாணசபை உறுப்பினர்களில் 97 பேர் நேற்று ஏகமனதாக யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

தலவத்துகொடவில் உள்ள கிரேன்ட் மொனாச் ஹோட்டலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 123 மாகாணசபை உறுப்பினர்களில் 97 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தினால், ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெற முடியும் எனவும் சஜித்திற்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட சந்திப்பில் அமைச்சர்கள் தலதா அத்துகோரள, சாந்தனி பண்டார, ராஜாங்க அமைச்சர்களான இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எஸ்.எம்.மரிக்கார், ஹேசா விதானகே ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.