ரணிலின் தீர்மானத்திற்கு எதிராக யாரும் செயற்பட முடியாது! ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை

Report Print Murali Murali in அரசியல்

கட்சி தலைவரின் செயற்பாட்டிற்கு எதிராக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குத் தேவையான தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு வெற்றிபெறுவதற்கான தீர்மானம் கட்சியினால் முன்னெடுக்கப்படும். இதுவரையில் எந்தவொருவரும் பெரஹரவில் செல்லவில்லை.

இந்நிலையில், பலர் குறித்தும் பிரச்சினைகள் உள்ளன. பொருத்தமான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் குறித்த சமிஞ்கை வெளியாகியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

அமைச்சர், சஜித் பிரேதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் பலரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து விரைவில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கள மௌனம் காத்து வருகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே, கட்சி தலைவரின் செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் கூறியுள்ளார்.