சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ்?

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தலைதூக்கியுள்ளன.

இதனை உலகறியச் செய்யும் நோக்கிலும், இரு பிரதான கட்சிகளின் மீது முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை வெளிப்படுத்தவும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த வியடம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்விடம் அந்த ஊடகம் தொடர்புகொண்டு கேட்டிருந்தது. இதற்கு பதலளித்து பேசிய அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும், உரிய நேரம் வரும் போது அது குறித்து தீர்மானிக்கப்படும்” என அவர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் குறித்த சமிஞ்கை வெளியாகியுள்ள நிலையில், கொழும்பு அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து வருகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதை வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அந்த வகையில் முஸ்லிம்களின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ரவூப் ஹக்கீம் களமிறங்க வேண்டும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்ட வரும் நிலையில், தற்போது ஹிஸ்புல்லாஹ்வின் பெயரும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.