ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நான்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதில் 1706 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கைச்சாத்திடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நல்லாட்சி அரசாங்கம் அவற்றை ரத்துச் செய்திருந்தது.
எனினும் அதன் காரணமாக இலங்கைக்கு 1706 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020-21 ஆண்டுகளில் ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு கொள்வனவு செய்யப்படவிருந்த மேலும் நான்கு எயார்பஸ் விமானங்களுக்கான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இதே அளவிலான நஷ்டம் ஏற்படக் கூடும் என்றும் கோப் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப் கமிட்டியின் குறித்த அறிக்கையை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் கமிட்டியின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.