புதிய இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு உயர் பதவியை வழங்கி அழகு பார்ப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாரதூரமான - நம்பகத்தன்மைமிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவியை அரசு உடன் பறித்தெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிப் போரின்போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் ஏற்கனவே போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவிக்கு எதிராக சர்வதேச அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது பாரதூரமான - நம்பகத்தன்மைமிக்க போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும்கூட அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மனித உரிமைகளை விரும்பும் எவரும் இவருக்கான உயர் பதவியை விரும்பமாட்டார்கள்.

அதுதான் ஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளும் இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்க்கின்றன.

பாரதூரமான குற்றச்சாட்டுக்களைப் புரிந்த இவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தண்டனையை வழங்கவேண்டும்.

அதைவிடுத்து உயர் பதவியை இவருக்கு எப்படி வழங்க முடியும்? அதுவும் பாதுகாப்பு சம்பந்தமான உயர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...