காலிமுகத்திடலில் கூடிய மக்கள் கூட்டம்! அரசியல் கத்துக்குட்டிகள் கூறும் விமர்சனம்

Report Print Murali Murali in அரசியல்

நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழிக்கின்ற பிரதான விடயத்தை முன்வைத்தே மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தனது ஜனாதிபதி வேட்பாளரை முன்நிறுத்தியுள்ளது.

இவ்வாறு அந்த கட்சியின் பிரசாரச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 18ம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் கூட்டத்தின் பின்னர் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.

மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட எமது கூட்டம் குறித்து சிலர் பல்வேறு விமர்சனத்தை வெளியிட்டு வருவதோடு ஒருசில அரசியல் கத்துக்குட்டிகள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக விளையாட்டுப் பொருட்களை கீழே அடித்துக்கொள்கின்றனர்.

அவற்றை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 71 வருடங்களாக ஏமாற்றியே வருகின்றன. பச்சை, நீலம் என்று மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் நாட்டை மாற்றுத்திசைக்கு இட்டுச்செல்கின்ற திசைக்காட்டியை காலிமுகத்திடலில் 18ம் திகதி ஆரம்பித்திருக்கின்றோம். எமது வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவை தேசிய மக்கள் சக்தியாக முன்நிறுத்தியுள்ளோம்.

அத்துடன், அவர் தலைமையில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். இன்னும் 03 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும்”.

“பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் தலைமையிலானவர்களின் கொள்கைகள் முற்றிலும் வித்தியாசமானதல்ல.

கொள்ளை, திருட்டு, வீண்விரயம் என்பன அவர்களுடைய மரபணுக்களாகும். அந்தக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்கும் அதிகளவான வழக்கு விசாரணைகள் காணப்படுகின்றன.

அப்படிப்பட்ட நபர்கள் எவ்வாறு நாட்டு மக்களை நல்வழியில் கொண்டுசெல்ல முடியும்? எனவே எமது போராட்டம் என்பது தேர்தலில் வெற்றிபெறுவதோடு நின்றுவிடாது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, பதவியை இராஜினாமா செய்வதல்ல, தொடர்ந்து முன்சென்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்காகும்.

எமது இந்த இலக்கை அடைவதற்கு அனைத்துக் கட்சிகளையும் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு நாம் அழைக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...