ஷிரந்தி ஜனாதிபதியானால் என்னாகும்.....? ஆதரவு கொடுப்பார்களா மக்கள்....

Report Print Tamilini in அரசியல்
518Shares

அடுத்தடுத்து தேர்தல் களங்களை காண வேண்டிய நிலையில் இலங்கையர்கள் இருக்கிறார்கள்.

வரவிருப்பது ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா அல்லது மாகாண சபைத் தேர்தலா என்பது தொடர்பில் முடிவாகாத நிலையில் கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராயத் தொடங்கிவிட்டன.

இதில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் வேட்பாளர் யார் என்பதனை தெளிவாக அறிவித்துவிட்டனர். எனினும் அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நடக்கவிருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளராக யார் யாரெல்லாம் களமிறங்கவுள்ளார்கள் என நாளுக்கு நாள் புதுப்புது தகவல்களாக ஒவ்வோர் வேட்பாளரது பெயர்களும் வெளிவந்தவண்ணமுள்ளன.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தரப்பில் கோத்தாவுக்கு பதிலாக, ஷிரந்தி, சமல், பசில் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

ஷிரந்திக்கு மக்கள் பாரிய அளவில் வாக்களிப்பார்களா? இச்சந்தேகத்தின் பின்னணியில் அவரை நியமிப்பதற்கான வாய்ப்புக்குறைவு என்றொரு கருத்தும் நிலவுகிறது.

அவ்வாறு அவரை நியமிக்க வாய்ப்புக்குறைவு என ஒரேயடியாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், ஷிரந்தியை வேட்பாளராக நிறுத்திவிட்டு, ஒரு குறுகிய காலப்பகுதியில் ( உதாரணமாக ஆறு மாதங்களில்) 19வது திருத்தைத் திருத்தி, ஷிரந்தி ராஜினாமா செய்தபின் தான் மீண்டும் ஜனாதிபதி ஆவதாக மக்களுக்கு உறுதியளிக்கலாம். ( ராஜினாமா செய்தால் பாராளுமன்றம்தான் ஜனாதிபதியை அப்பதவிக் காலத்தின் மிகுதிக்காலத்திற்கு தெரிவுசெய்யும்) அவ்வாக்குறுதியை மக்கள் நம்பமாட்டார்கள்; என நிராகரிக்க முடியாது.

இங்கு கவனிக்க வேண்டியது, மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த அல்லது மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் பாமரமக்கள் மக்கள்.

பொதுவாக அரசியலில், குறிப்பாக தேர்தல் ஒன்றின்போது பாமரமக்களிடம் “அறிவிற்கு விருந்து” பெருந்தாக்கம் செலுத்துவதில்லை; மாறாக “உணர்விற்கு விருந்தே” தாக்கம் செலுத்துகின்றது.

இன்று ரணிலிக்கும் மஹிந்தவிற்கும் இடையேயுள்ள மக்கள் செல்வாக்கு வித்தியாசத்திற்கு பிரதான காரணமும் இதுதான்.

ரணில் விக்ரமசிங்க இன்று தென்கிழக்காசியாவிலேயே சிறந்த ராஜதந்திர அரசியல்வாதியாக பேசப்படுகின்ற ஒருவர். ( அதற்காக அவரிடம் அரசியல் பலயீனங்கள் இல்லையென்பது பொருளல்ல). ஆனால் அவருடைய மேடைப் பேச்சுக்கள் மக்களைக் கவருவதில்லை. காரணம் அப்பேச்சுகள் முழுக்க முழுக்க அறிவியல் அல்லது அறிவு சார்ந்ததாக இருக்கும்.

மாறாக, மஹிந்தவின் பேச்சுக்களில் “அறிவுக்கு விருந்து” தேடித்தான் பொறுக்க வேண்டும். ஆனால் “உணர்வுக்கு விருந்து” பரவிக்கிடக்கும்.

நாம் மஹிந்த, ரணில் ஆட்சியில் பாதிக்கப்பட்டதற்காக அவர்கள்மீது ஆத்திரம், அதிருப்தி கொண்டிருக்கின்றோம்.

அன்று மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த கொடுமைகளின் உச்சம்தான்தான் மஹிந்தவை தூக்கிவீசினோம். மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்யலாமா....

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் அவர்களை ஆராய்ந்து இரு தரப்பும் நமக்குப் பாதிப்பானதுதான்; ஆனால் ஒப்பீட்டளவில் இந்த தரப்பைவிட இந்த தரப்பு பாதிப்பு குறைந்தது; எனவே, இந்தத் தரப்பைத் தெரிவுசெய்வோம்; என்று ஒரு முடிவு எடுத்தால் நம்மை ஓர் அறிவுடமைச் சமுதாயம்; எனலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சிறிய விகித வாக்கைக்கூட வீணாக்கமுடியுமா?

இவற்றைப் பற்றியெல்லாம் நம்மவர்கள் சிந்திப்பதில்லை. ஏனெனில் நாம் வெறும் உணர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்ட சமூகம் எனலாம்.

நீங்கள் இவருக்குத்தான் வாக்களியுங்கள்; என்று நமக்கு கூறுவதற்கு கட்சிகள் தேவையா? அவ்வாறாயின் மேலே, ஆரம்பத்தில் கூறப்பட்ட கூற்று நிரூபிக்கப்படவில்லையா? அதாவது நாமும் அறிவால் வழி நடாத்தப்படாத, வெறும் உணர்வுகளால் வழிநடாத்தப்படுகின்ற ஒரு சமூகம் என்று.

எவ்வாறு பெரும்பான்மை சமூக மக்களின் வெறும் உணர்வு அரசியலை முதலீடாக வைத்து இந்த நாடு தேசிய அரசியல்வாதிகளால் அவர்களது சுயநலன்களுக்காக சீரழிக்கப்படுகின்றதோ அதேபோன்றுதான் சிறுபான்மை இனத்தவர்களுக்கும்.

இவ்வாறு அறிவைத் தூரமாக்கிவிட்டு உணர்சிக்கு அடிமையாகி அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது பெரும்பான்மை சமூக மக்கள் மஹிந்தவின் உணர்ச்சி பேச்சில் கட்டுண்டு ஷிரந்தியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?

எனவே, கோத்தபாயவின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தீராவிட்டால் ஷிரந்தி வேட்பாளராக வருவது சாத்தியமே இல்லை என ஒரேயடியாக நிராகரிக்க முடியாது.

மட்டுமல்ல; அவ்வாறு ஷிரந்தி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு, 2/3 பங்கு கிடைக்காமல் 19ஐத் திருத்தமுடியாமல்போய் ஷிரந்தி தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தாலும் யதார்த்தத்தில் முழு அதிகாரமும் மஹிந்தவிடம்தான் இருக்கும்.

எனவே, கோத்தபாய போட்டியிட முடியாமல்போனால் ஷிரந்தியும் சாத்தியமான ஒரு தெரிவே! மகிந்த ராஜபக்ச போடும் இக்கணிப்பினை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அதிகம்.

ஏனெனில் மகிந்த ராஜபக்ச தரப்பில் யார் நிறுத்தப்படுகின்றார் என்பதல்ல முக்கியம், யாரை இலக்கு வைத்து எந்த வாக்கு வங்கிகளை குறிவைத்து காய்களை நகர்த்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தது.

தங்களின் கொள்கைகளை காலாகாலமாக அவர்கள் நம்பும் வரலாற்று முக்கியத்துவங்களை கையிலெடுத்துக் கொண்டு தேர்தல் மேடைகளில் களமிறங்கப் போகிறார்கள்.

கோத்தபாய இல்லாவிட்டாலும் ஷிரந்தி இறங்குவார். ஆனால் பிரசாரம் மட்டும் மாறாது என்பது வரலாற்று உண்மையாகிறது.