சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்
256Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றியேனும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியொன்று தயாராகி வருவதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்த அந்த அணியினர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து விலகி இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட தவிசாளரான குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கடந்த சில தினங்களாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான யோசனை ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 தொகுதி அமைப்பாளர்கள் கையெழுத்திட்டு, கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.

இந்த தொகுதி அமைப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்ததாகவும் கட்சி மீண்டும் ராஜபக்சவினரின் கட்சியிடம் சென்றால் மேலும் அழிந்து போகும் என தமது யோசனையில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லது எதிரணிக்கு ஆதரவை வழங்க வேண்டும் எனவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் சமர்ப்பிப்பதாக துமிந்த திஸாநாயக்க உறுதியளித்தார் எனவும் ரஜிக கொடித்துவக்கு கூறியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தனியாக வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே அந்த கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி முன்னர், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவை செப்டம்பர் 3ஆம் திகதி அறிவிப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.

நிபந்தனையின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணையாது எனவும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சி உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பது தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்த, கட்சியின் மத்திய செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. எனினும் இறுதி தீர்மானத்தை மத்திய செயற்குழுவே எடுக்கும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.