ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் காதல் கொண்டுள்ள கூட்டமைப்பு

Report Print Ashik in அரசியல்
104Shares

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சம்பந்தன் காதல் கொண்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் இருப்பையும் தமிழ் தேசியத்தின் அடிப்படை வாதத்தையும் தமிழ் தேசியத்தின் எதிர்கால நோக்கையும் இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டு வருகின்றது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றது.

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக இன அழிப்பில் ஈடுபட்டவர்.

ஜக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையிலே சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கூட தந்தையாரை கொலை செய்த தமிழர் தரப்புக்கு மகனிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியுமா என்கின்ற கேள்வி இருக்கின்றது. கடந்த 2015ஆம் ஆண்டில் இதே தவறைத் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்தது.

எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி சந்திரிக்காவையும், ரணில் விக்ரமசிங்கவையும் நம்பி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்போம் அல்லது ஆதரிக்கவேண்டும் என்கின்ற சம்பந்தனின் கூற்றும் எதிர்ப்பார்ப்பும் அவருடைய முதிர்ச்சி அற்ற அரசியல் போக்கை வெளிக்காட்டுகின்றது.

வயது மட்டும் தான் அவருக்கு போய் இருக்கின்றதே தவிர சிங்கள மக்களையும், சிங்கள அரசியல் வாதிகளின் மனோ நிலையினையும் புரிந்து கொள்ளாமல் இதயத்தில் இருக்கின்றோம் அல்லது நாங்கள் நினைப்பதை செய்து விடுவோம் என்று சம்பந்தன் அவர்கள் சிறு பிள்ளைத்தனமாக பேசி இந்த நான்கரை ஆண்டுகளிலே தமிழ் தேசியத்தை கொழும்பிலே அடகு வைத்துவிட்டார்கள்.

தமிழ் மக்களையும் கொழும்போடு இணைத்து அவர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடிய ஒரு மோசமான நிலைப்பாட்டை சம்பந்தனின் தந்திரோபாயமற்ற அரசியல் நகர்வு ஒரு விளைவை ஏற்படுத்தி விட்டது. அவ்விதமான ஒரு தவறை இந்த முறையும் அவர்கள் எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது.

அவர்கள் தொடர்ச்சியாகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் காதல் கொண்டுள்ள இச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் இருப்பையும் தமிழ் தேசியத்தின் அடிப்படை வாதத்தையும் தமிழ் தேசியத்தின் எதிர்கால நோக்கையும் இல்லாமல் செய்கின்ற வேலையில் ஐக்கிய தேசியக்கட்சி ஈடுபடும்.

ஆகவே இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் ஆதரிக்கக் கூடிய சூழ்நிலை இருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது.

இவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை முன் வைக்கப் போகின்றார்கள், சிங்கள மக்களுக்கு மத்தியில் அதனை எழுத்து மூலமாகவும் உறுதி பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலதே தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்கின்ற தீர்மானத்திற்கு வருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு இணைந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அண்மையில் கூறி இருந்த 'மறப்போம் மன்னிப்போம்' என்கின்ற கூற்றும், கடந்த காலத்தில் இந்த ஆயுத குழுக்கள் எவ்வாறான தமிழர் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள், அவர்கள் எல்லாம் போராடினார்கள் தியாகம் செய்தார்கள் என்கின்ற கூற்று வேடிக்கையாக இருக்கின்றது.

இந்த வேடிக்கையான கூற்றை தானும் தமிழ் தேசிய அரசியலிற்கு துரோகம் செய்ததை மறைப்பதற்காகவே அவர் சொல்கின்றார்.

ஆகவே இவர்கள் யாரும் தியாகிகள் இல்லை. இந்தியாவிற்குச் சென்று பல வருடங்களாக இந்திய அரசாங்கத்தின் அனுசரனையில் இருந்து விட்டு இப்போது வந்து மீண்டும் போர்க்குற்றவாளிகளுடனும், இனப் படுகொலையாளர்களுடனும் சேர்ந்து நின்று கோத்தபாய ராஜபக்சவை மன்னியுங்கள் என்று சொல்லுவதற்கு இவருக்கு எந்த விதமான உரிமையும் பொறுப்பும் தமிழ் மக்கள் சார்பாக கூறுவதற்கு கிடையாது.

இவர்கள் எல்லாம் தமிழ் தேசிய அரசியலுக்கு துரோகம் செய்தவர்கள். துரோகம் செய்த அரசியல் பின்னனியைக் கொண்டுள்ளவர்கள் தமிழ் மக்களிடம் மன்னியுங்கள் என்று சொல்வது மிக மிக வேடிக்கையானது.

வேடிக்கையிலும் பார்க்க இவர் போராடினார் என்று சொல்கின்றவர்கள் கூட கடந்த காலத்தில் எவ்வாறான துரோகங்களையும், காட்டிக்கொடுப்புக்களை தமிழ் மக்களுக்கு செய்தார்கள் என்பதனையும் நாங்கள் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

தமிழ் மக்கள் இவ்வாறானவர்களுக்கு தேர்தல்களின் போது தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதனை வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் போன்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.