மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? - நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதிக்கு

Report Print Steephen Steephen in அரசியல்
106Shares

விகிதாசார தேர்தல் முறையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதா இல்லையா என்ற உயர் நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தை அறிய ஜனாதிபதி அனுப்பிய கோரிக்கை தொடர்பான வாத பிரதிவாதங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் நிறைவடைந்தன.

இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், மாகாண சபைத் தேர்தலை அறிவிக்க முடியுமா மற்றும் மாகாண சபைத் தேர்தலை 2017ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் முறை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் முன்னர் நடைமுறையில் இருந்த சட்டத்திற்கு அமைய நடத்த முடியுமா என ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக ஆராய்ந்தது.

ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் 13 குறுக்கீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எல்லே குணவங்ச தேரர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச உட்பட 13 பேர் குறுக்கீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

முன்வைக்கப்பட்ட சகல வாதங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, விசாரணைகளை நிறைவு செய்ததுடன் நீதிமன்றத்தின் இரகசிய முடிவை ஜனாதிபதி அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் தனது முடிவை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளது.