முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணிபுரிந்தபோது இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் அவர் ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னரும் தொடரும் என்று அனுமானிப்பது தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு ஆரம்பத்திலிருந்து எதிர்ப்பு வெளியிட்டுவந்த வாசுதேவ இறுதியில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, கோத்தபாய ராஜபக்ச மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், அவர் ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னர் அவ்வாறே இடம்பெறும் என்று யாராவது அனுமானித்தால் அதற்கு எந்த அடிப்படையுமோ அல்லது சாட்சிகளோ கிடையாது.
இந்த காலத்தில் இப்படி நடந்தது ஆகவே ஆட்சிக்கு வந்தபின்னரும் இது நடக்கும் என்று கூறுவதில் என்ன தர்க்கம் இருக்கின்றது? இன்று அரசியலில் புதிய மார்க்கம் உள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்குகின்றோம். பின்னர் மக்களுக்குரிய அபிவிருத்திக்கும், சர்வதேச நாடுகளுடன் பொருளாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைக்கும் செல்கின்றோம்.
இவையே புதிய திருப்பங்களாகும். நான் செயலாளராக இருந்த காலத்தில் இது நடந்தது என்று கூறமுடியாது. சாட்சிகளில்லை. கோத்தபாயவின் ஆலோசனைப்படியே இது இடம்பெற்றதாகக் கூறும் அளவுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
அவருடைய காலத்தில் இடம்பெற்றது என்று கூறினாலும் எதிர்காலத்தில் அவை இடம்பெறும் என்று கூறமுடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் 88களில் 60 ஆயிரம் இளைஞர்கள் காணாமல்போனார்கள். வீதிகளில் பிணங்கள் கிடந்தன.
ஜே.வி.பியின் கிளர்ச்சியில் பலர் பலியாகினார்கள். அவர்களுடைய கட்சிகளில் இன்று வேட்பாளர்கள் இருக்கின்ற நிலையில், கோட்டாபயவின் காலத்தில் இடம்பெற்ற ஒருசில காணாமல்போன சம்பவங்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் நடக்கும் என்று அனுமானிக்க முடியாது.
நான் முன்னர் ஒன்றைக் கூறினேன். இப்போது இன்னுமொன்றைக் கூறுகிறேன் என்று யாராலும் சுட்டிக்காட்டலாம்.
கோத்தபாயவுக்கு எதிராக நிலைப்பாடு இருந்தாலும் அவருடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னர் அவருக்கு நாட்டில் இருக்கின்ற கேள்வி நிலையை பார்க்கும்போது அவருடைய கருத்துக்களைக கேட்டபின்னர் அவரை வேட்பாளராக ஏற்றுக்கொள்வது வெற்றிக்கான வழியாகும்.
நாங்கள் அவரை நம்புவதோடு அவரே எமது மக்களின் பிரதிநிதி” என அவர் மேலும் கூறியுள்ளார்.