கட்சி தலைமையையும், கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளார்.
சிங்கள வார இதழொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட செயன்முறையாக கட்சி உறுப்பினர்களிடம் சுய விளக்கம் கோரப்படவுள்ளது என்றும், அதன்போது கட்சியின் யாப்பைமீறும் வகையில் செயற்பட்டிருந்தால் – கருத்துகளை முன்வைத்திருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் அனுமதி இல்லாமல் பேரணிகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சி தலைமை தீர்மானித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குமாறுகோரி சஜித் அணி உறுப்பினர்களால் மாவட்டம்தோறும் பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமர் இவ்வாறு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
“கட்சியின் செயற்குழுவில் கலந்துரையாடி தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையை சிலர் சந்திக்கு கொண்டுவந்துள்ளனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.