சதித்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த சஜித்! மூக்குடைபட்டார் மைத்திரி

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இழுபறிகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கோரி, ஐ.தே.கவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆவணம் ஒன்றை கையளித்திருந்தனர்.

இந்த ஆவணத்தின் அடிப்படையில், ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமித்து, புதிய அமைச்சரவையை அமைக்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

எனினும், இந்த முயற்சிகளுக்கு சஜித் பிரேமதாச ஒத்துழைக்க மறுத்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டால், கட்சியின் ஆதரவாளர்கள் தன்னைக் காட்டி கொடுத்தவர் என்று குற்றம் சாட்டுவார்கள் எனவும் அதனால் தன் மீது வெறுப்படைவார்கள் என்றும், சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதவியேற்றால் அது அரசியல் சதித் திட்டமாகவே அழைக்கப்படும் என்ற அச்சத்தினால், அதற்கு ஒத்துழைக்க அவர் மறுத்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.