கோத்தாவின் தேர்தல் பணிகளில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர்! விலகிச் செல்லும் அரசியல்வாதிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து அரசியல்வாதிகள் ஒதுங்க ஆரம்பித்துள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச தனக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதுவரை மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு பதிலாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை தனது தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளமை ராஜபக்ச அணியில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.

கோத்தபாய தற்போது நாடு முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளை ஒன்று திரட்டி, ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு தலா 40 பேரை அமைப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த பொறுப்பை கோத்தபாய, போர் குற்றங்களை எதிர்நோக்கியிருக்கும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாகி காலகேவுக்கு வழங்கியுள்ளார்.

கால்கே, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு, ஓய்வுபெற்ற இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பித்து ஒரு நாள் கருத்தரங்கை நடத்தவுள்ளார். 6 ஆயிரம் பேர் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை காரணமாக ராஜபக்சவினருடன் இணைந்து பிரதேச அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ராஜபக்ச ஆட்சியில் கோத்தபாய ராஜபக்ச சிவில் அதிகாரியாக கடமையாற்றிய போது, படையினர் மீதே முழு நம்பிக்கை வைத்து செயற்பட்டு வந்தார். வீதிகளை செப்பனிடுதல், கற்களை பதித்தல் உட்பட அனைத்து பணிகளிலும் இராணுவத்தினரே ஈடுபடுத்தப்பட்டனர். நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் கார் பந்தயங்களை நடத்த மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகளிலும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது வேட்பாளராக களமிறங்கியுள்ள கோத்தபாய தனது தேர்தல் பணிகளுக்கும் இராணுவத்தினரை பயன்படுத்த திட்டமிட்டிருப்பது அவரது இராணுவ மனநிலையை காண்பிப்பதாகவும் இது அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், இராணுவ ஆட்சி நிர்வாகம் ஏற்படும் என்பதற்கான அறிகுறி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெரிவித்துள்ளனர்.

கோத்தபாயவை சுற்றியிருக்கும் இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள், கோத்தபாயவிடம் கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை என்பதுடன் கோத்தபாயவும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது இராணுவ மனநிலை எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை வெளிக்காட்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் இந்திய புலனாய்வுப் பிரிவின் அறிக்கை ஒன்று கிடைத்துள்ளது. கோத்தபாய ராஜபக்ச சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் ஊதியம் பெறும் முகவர் எனவும் அவர் எந்த வகையிலும் இந்தியாவின் நண்பராக இருக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச தனக்கு தெரிந்த அனைத்து இந்திய நண்பர்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது இந்தியாவின் இரண்டாவது பலமிக்க நபரான இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவாலை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டுள்ளார். எனினும் இருவரும் கோத்தபாயவை சந்திக்க நேரத்தை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரசியல் குடும்பம் என இந்திய ராஜதந்திரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.