வவுனியாவில் மாவீரன் பண்டார வன்னியன் நிகழ்வில் வெளிநடப்பு செய்த கூட்டமைப்பின் எம்.பி

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியாவில் நடத்தப்பட்ட மாவீரன் பண்டார வன்னியனின் 216ஆவது நினைவு தின நிகழ்வு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கட்சி நிகழ்வா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்ற வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் நினைவு தின நிகழ்வில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா வெளிநடப்பு செய்திருந்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று காலையில் பண்டார வன்னியனின் நினைவுச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பண்டார வன்னியனின் கொடியினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏற்றி வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்ற போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் உரையாற்றியிருந்தார்.

நீண்ட நேரமாக விருந்தினர் வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா அமர்ந்திருந்த போதும் அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்டபடவில்லை.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் செந்தில்ரூபன் என்பவரை அழைத்து தனக்கு உரையாற்ற 5 நிமிடம் வழங்குமாறு சாந்தி சிறீஸ்கந்தராஜா கோரியிருந்தார்.

அவர் நகரசபைத் தலைவர் இ.கௌதமனிடம் கோரிய போதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனை குறித்த உறுப்பினர் எம்.பியிடம் தெரிவித்ததையடுத்து, இது பண்டாரவன்னியன் நிகழ்வா? அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி நிகழ்வா என கேள்வி எழுப்பிய படி மண்டபத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

இதன்பின் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய நிகழ்வு மிகவும் மதிக்கக் கூடிய ஒரு நிகழ்வு. பண்டார வன்னியனின் 216ஆவது இந்த நிகழ்வை மிகவும் கோலாகலமாக கொண்டாடியதையிட்டு மகிழ்வடைக்கின்றேன்.

நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் நான் ஒரு வன்னியாள். அந்த வன்னி மண்ணைச் சேர்ந்தவள். அந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவள் என்ற உணர்வுடன் இந்த நிகழ்வில் பங்கு பற்றியிருந்தேன்.

ஆனாலும் பண்டார வன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நகரசபையில் இடம்பெற்ற நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வு ஆக போய்விட்டதோ என்ற வேதனையை நான் உணர்கின்றேன்.

இந்த நிகழ்வில் சக நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கும் எனது கருத்தை சொல்வதற்கான எளது கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வன்னி மண்ணை காத்த வீரன் பண்டாபர வன்னியன் நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டதோ என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. காட்டிக் கொடுப்புக்களால் தான் அன்று பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டான். எங்களுடைய ஆயுதப் போராட்டம் காட்டிக் கொடுப்பால் தான் தோற்கடிக்கப்பட்டது.

இன்று நடந்த வரவேற்பு நிகழ்வு சிங்கள தேசத்திற்கு நாம் தமிழ், சிங்களம் என்ற ஒற்றுமையுடன் வாழத்தயார் என்ற ஒரு செய்தியை சொல்கிறது.

ஒரே நாட்டிற்குள் எங்களுக்குரிய சுதந்திரத்துடன் நாங்கள் ஒற்றுமையாக வாழ தாயராக இருக்கின்றோம்.

ஆனால் அதை தர சிங்களதேசம் தயாராகவில்லை என்பதை அந்த நிகழ்வு சொல்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலையை உருவாக்க சம்மந்தன் ஐயா தலமையில் முயன்று கொண்டிருக்கையில் காட்டிக் கொடுப்புக்களால் தோற்கடிக்கப்படுகின்றோம்.

மீண்டும் காட்டிக் கொடுப்புக்களால் எங்களது பிரச்சனை நீண்டு செல்கின்றது என்ற வேதனையையும் கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்காகவே சிவமோகன் என் மீது குற்றம் சாட்டுவதாக சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றார். இது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியை மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களை ஒரு குழுவாக அமைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இருவரையும் விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையிலே அவரால் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறாக நான் காணி அபகரிக்கவும் இல்லை. காணியை களவாக பிடிக்கவும் இல்லை.

அதற்குரிய சகல ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றது. அந்த காணிக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. அது எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான காணி. அந்த காணியிலே எனது கணவர் 40 வருடங்களாக வயல் செய்கின்றார், தோட்டம் செய்கின்றார்.

ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது.

இதனுடைய விசாரணைகளின் முடிவில் அரசாங்க அதிபர் எழுத்து மூலமாக எனக்கு அறிவித்திருக்கிறார்.

இது கையகப்படுத்தப்பட்ட காணி அல்ல நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்த போர்வையிலேயே நான் இந்த காணியை கையகப்படுத்தவில்லை. எனது கணவருக்கு அது சொந்தமான காணி என்பதை எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார்.

விசாரணைகளின் முடிவில் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.