மகிந்த ராஜபக்சவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும்...!

Report Print Jeslin Jeslin in அரசியல்

சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலில் வென்று விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்த மகிந்த அணி இப்போது தமிழர்களின் பக்கம் திரும்பத் தொடங்கியிருக்கின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளை இழப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதில் மகிந்த - கோத்தா அணி உறுதியாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எதையும் செய்யக்கூடியவர்களாக அவர்கள் இருக்கின்றாரக்ள். அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் இது.

2005ஆம் அண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆவதையோ அவர் தலைமையிலான அரசாங்கம் அமைவதையோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை.

அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டம் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச இப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி அதிகம் பேசத் தொடங்கியிருக்கின்றார். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியில் அவர் பிரபாகரனின் பாதை தவறாக இருந்தாலும் அவர் ஒரு நோக்கத்திற்காக போராடினார். அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது என்று கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த கருத்தை பிரபாகரனைப் புகழ்ந்து வெளியிட்ட கருத்தாக பலரும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எந்த சூழ்நிலையில் யாருடன் ஒப்பீடு செய்து இந்தக் கருத்தை அவர் கூறியிருந்தார் என்பதை பார்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பீடு செய்து அந்த தாக்குதலை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் ஒப்பீடு செய்தே மகிந்த இந்தக் கருத்தை வெளியிட்டார். அப்படிப் பார்க்கும் போது மகிந்தவின் இந்தக் கருத்து புகழுரையா இல்லையா என்ற கேள்வி உள்ளது.

அதேநேரம் இப்போது மகிந்த ராஜபக்ச பிரபாகரன் பற்றிக் கூறிய கருத்து சற்று வேறுபட்டது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான்.

அந்த தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று புலிகளே கோரியிருந்தனர். அதனால் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காமல் போனது. அது மகிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

அப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆவதை அவர் ஆட்சியமைப்பதை பிரபாகரன் விரும்பவில்லை என்ற மகிந்த ராஜபக்சவின் கருத்து உண்மையானதே.

அது 14 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் தரப்பின் வியூகம். அப்போது தமிழர்களிடம் ஆயுத பலம் இருந்தது. அதனால் விடுதலைப் புலிகள் போரின் மூலம் தமது இலக்கை அடையலாம் என திட்டமிட்டிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு மேற்குலக ஆதரவு பலமாக இருந்தது. ரணில் அரசுடன் போருக்குச் சென்றாலும் சிக்கல். போருக்குச் செல்லாமல் அமைதிப் பேச்சுக்களை நடத்தினாலும் போராட்டம் அழிந்து விடும் என்ற நிலை புலிகளுக்கு இருந்தது.

அதனால் தான் கடும்போக்குவாதியான மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கருதினர்.

அது மகிந்தவுக்கு சாதகமாக மாறியது. ரணில் தோற்கடிக்கப்பட்டார். அவரைத் தோற்கடிக்க நினைத்த புலிகளும் கடைசியில் மகிந்தவினால் தோற்கடிக்கப்பட்டனர். இது முந்திய வரலாறு.

இப்போது மகிந்த ராஜபக்ச இந்த வரலாற்றில் தனக்குச் சாதகமான ஒரு சில பக்கங்களை மாத்திரம் தூசித்தட்டிக் கொள்ள முற்படுகின்றார்.

ரணில் ஜனாதிபதியாவதை பிரபாகரன் விரும்பவில்லை. எனவே பிரபாகரன் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார்.

ராஜபக்சவினரை தமிழ் மக்கள் இனப்படுகொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் காரணமானவர்களாகப் பார்க்கின்ற ஒரு நிலையில்தான் மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

அவர் பிரபாகரனை வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை தனது பெட்டிக்குள் போட்டு கொள்ளலாம் என எத்தனிக்கின்றார். இது ஒரு விந்தையான வேண்டுகோள்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரனை கொடிய பயங்கரவாதியாக சித்தரித்தவர் மகிந்த, தமிழ் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் பிரபாகரன் என்றும் தப்பிச் சென்ற மக்களை படுகொலை செய்தவர் என்றும் பிரசாரம் செய்தவர் மகிந்த.

அப்படிப்பட்டவர் இன்று பிரபாகரன் அப்போது விடுத்த வேண்டுகோளை இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கின்றார்.

பிரபாகரனின் இலட்சியம் வேறு தமிழ் மக்களின் இலட்சியம் வேறு என்று கூறியவர் இப்போது தமிழ் மக்களிடம் பிரபாகரன் 14 ஆண்டுகளுக்கு முன் விடுத்த வேண்டுகோளை நினைவுபடுத்தி வாக்கு யாசகம் செயகிறார்.

பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்கின்றார்கள் என்றால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ரணில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார்.

தமிழ் மக்கள் தமது தலைவராக கொண்டாடிய பிரபாகரனைக் கொன்று அவர் வழிநடத்திய புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டு பிரபாகரன் கூறியபடி வாக்களியுங்கள் என்று கேட்பது மிகப் பெரிய கேலிக்கூத்து.

இப்படியும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என்றளவுக்கு இன்று நிலைமை தாழ்ந்து போயிருக்கின்றது. இது பிரபாகரனுக்கு கிடைத்த வெற்றி.

பிரபாகரன் உயிருடன் இல்லை. ஆனாலும் அவர் 14 ஆண்டுகளுக்கு முன் கூறிய ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அவரை அழித்தவர்களே கோருகின்ற நிலைக்கு வந்திருக்கின்றனர்.

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் எப்படி சிந்திப்பார்கள், அணுகுவார்கள் என்பதை பொறுத்திருந்தே பாரக்க வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை சிங்கள் மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று சிந்தித்தாரா என்று தெரியவில்லை.

புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்டி போரைத் தொடுத்து ஆயிரக்கணக்கில் படையினரைக் காவு கொடுத்து விட்டு கடைசியில் போய் பிரபாகரனின் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் என்று அரசியல் லாபத்திற்காக கேட்கிறாரே என்று அவர்களில் பலரும் சிந்திப்பார்கள் என்பதை அவர் நினைக்கவில்லையா? அல்லது அங்கு ஒரு முகம் காட்டலாம், இங்கு ஒரு முகம் காட்டலாம் என்று அவர் கருதுகின்றாரா? இல்லை சிங்கள மக்களை முட்டாள்களாக கருதிக் கொண்டிருக்கின்றார்களா?

2005 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் தடுப்பதற்கு புலிகளுக்கு மகிந்த ராஜபக்ச பணம் கொடுத்தார் என்றொரு குற்றச்சாட்டும் உள்ளது. அது தொடர்பான வழக்கும் நடந்து வருகின்றது.

2005இல் பிரபாகரன் கூறியதை தமிழ் மக்கள் இப்போது மதித்து நடக்க வேண்டும் என்று தனது வசதிக்காகவும் வெற்றிக்காகவும் கூறுகின்ற நிலைக்கு வந்திருக்கின்ற மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் விடுதலை தொடர்பாக பிரபாகரன் கூறியதையும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு வருவாரா?

பிரபாகரன் ஒருபோதும் எந்தவொரு சிங்களத் தலைவரையும் நம்பியது கிடையாது. அவர் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் அனைவரையும் ஒரே விதமாகத்தான் பார்த்தார். அந்தப் பார்வையில் எந்தெந்த தவறையும் தமிழ் மக்களால் கண்டறியவும் முடியாது.

ஏனென்றால் எல்லா சிங்களத் தலைவர்களும் தமிழர்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள், அது பிரபாகரனுக்கு முன்னரும் இருந்தது. பின்னரும் தொடர்கின்றது.

டட்லி சேனநாயக்கவில் தொடங்கி மைத்திரிபால சிறிசேன வரை தமிழர்களை ஏமாற்றியிருக்கின்றார்கள் அவர்கள்.

இந்த நிலையில் எந்தவொரு சிங்களத் தலைவரையும் நம்ப முடியாது என்று தமிர்களுக்கு பிரபாகரன் கூறிய புத்திமதியையும், தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அறிவுரையையும் எடுத்துக் கூறும் துணிச்சல் தான் மகிந்தவுக்கு வருமா?

வாக்குகளுக்காக எதையும் பேசலாம் என்ற நிலைக்கு மகிந்த ராஜபக்ச வந்திருப்பது அவர் அரசியலின் விளிம்பு நிலைக்கு வந்திருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.

இதிலிருந்து வெற்றிக்காக எதையும் கூறுவார் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. இதனால் மகிந்த பற்றிய விம்பம் உடையுமே தவிர அவரது வாக்கு வங்கியை பலப்படுத்தாது.

- Virakesari