உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்! பேராயரின் கோரிக்கை நியாயமானது என்கிறார் கோத்தா

Report Print Rakesh in அரசியல்
77Shares

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையால் விடுக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையின் இந்தக் கோரிக்கையை, நாம் ஆட்சிப்பீடத்துக்கு வந்தவுடன் நிறைவேற்றவுள்ளோம்.

அதுமாத்திரமன்றி, இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் பயங்கரவாதம் மற்றும் இனவாதம் இன்றியும், நாட்டுக்குள் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றியும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை எமது ஆட்சியில் பெற்றுக்கொடுப்போம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையை அடுத்து, கொழும்பு பேராயருக்கு ஏற்பட்டுள்ள சிரம நிலைமையை நான் புரிந்துகொள்கின்றேன்.

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவுமே பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை இந்தக் கோரிக்கையை அரசிடம் விடுத்துள்ளார்.

இவ்வாறான ஒரு சம்பவம் இனிவரும் காலங்களிலும் இடம்பெறாதிருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

நாட்டில் நிலைகொண்டிருந்த 30 வருடப் போரை, மூன்று வருடங்களில் நிறைவு செய்த எனக்கு, இந்த விடயத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடிகின்றது.

இந்தநிலையில், கொழும்பு பேராயரினால் அரசிடம் விடுக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை நியாயமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.