கோத்தபாய மீதான வெள்ளை வேன் கடத்தல் முற்றிலுமே பொய்!

Report Print Jeslin Jeslin in அரசியல்
145Shares

ராஜபக்சவினர் மீதுசுமத்தப்படும் வெள்ளை வேன் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ரதுபஸ்வல சம்பவத்தைப் போன்று காலியில் பாடசாலையொன்றில் குழந்தையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றனர். அவ்வாறாயின் ஏன் அது தொடர்பாக ஜனாதிபதியையும் பிரதமரையும் குற்றம் சாட்டவில்லை.

இவ்வாறான நிலையில் ரதுபஸ்வல போன்ற சம்பவங்களை வைத்துக் கொண்டு கோத்தபாய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டுவது ஏன்? குழந்தையை பார்க்கச் சென்ற தந்தையைக் கொன்ற ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்படாது இடம்பெறாத ஒன்றை ஏன் கோத்தபாய ராஜபக்ச மீது சுமத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்திலும் பல்வேறு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். அது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்படுவதில்லையே ஏன்?

இது சாதாரண விடயமல்ல. இது மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும். குறிப்பாக கோத்தபாய ராஜபக்சவை பழிவாங்கும் முயற்சியாகவே இது அமைகின்றது.

அவ்வாறு கோத்தபாய ராஜபக்ச குற்றம் செய்திருந்தால் கடந்த நான்கு வருடங்கிளல் உறுதி செய்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

முடியாத காரணத்தினாலேயே தற்போது வரை இவை குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் இவ்வாறு குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றது. ஐ.தே.கட்சியில் இடம்பெறும் குற்றங்களுக்கு பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக்கூற தேவையில்லையா?

ஆனால் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு கோத்தபாய ராஜபக்ச மட்டுமே பொறுப்புக் கூற வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கு காரணம் இருக்கின்றதா? 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து நாட்டில் அச்சமின்றி வாழ்வதற்கான சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த அவருக்கு கௌரவத்தையே வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் இன்று சுதந்திரமான சூழலை ஏற்படுத்திய கோத்தபாய ராஜபக்சவிற்கு கௌரவத்தையே வழங்க வேண்டும்.

பல வருடங்களாக நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டு ஒருவருக்கு எதிராக சேறுபூச முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.