எதிரிகளை வீழ்த்துவதற்கு ஒற்றுமையே வலிமையான ஆயுதம்!

Report Print Gokulan Gokulan in அரசியல்
43Shares

வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

எதிரிகளை வீழ்த்துவதற்கு ஒற்றுமையே வலிமையான ஆயுதம் என்பதை புரிந்து செயற்பட்டால் மாத்திரமே தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, கம்பளையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து நின்று சொற்சமரில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய அரசியல் கூட்டணியோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறு கருத்து மோதலில் ஈடுபடுவதானது ஏனையக் கட்சிகளுக்கே களம் அமைத்துக் கொடுக்கும்.

கட்சியின் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டிய விடயங்களை சந்திக்கு கொண்டு வருவதானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான விம்பத்தை உருவாக்கி விடும் என்பதையும் புரிந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக ஒற்றுமையைக் கருதியே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கினோம்.

எங்களின் இந்த விட்டுக்கொடுப்பை தியாகத்தை எவரும் பலவீனமாக கருதி செயற்படக் கூடாது. கூட்டணி ஜனநாயகத்தை மதிப்பதாலேயே மிகவும் கௌரவமான முறையில் பங்காளிகளாக செயற்பட்டு வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.