சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் கூட்டணி அவசியம்!

Report Print Steephen Steephen in அரசியல்
63Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த இரண்டு வாரங்களுக்குள், கட்சியின் செயற்குழுக் கூடி தெரிவு செய்து மக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி - அங்கும்புர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தெரிவு செய்யும். இது குறித்து நான் பலமுறை கூறியுள்ளேன்.

எமது கட்சியில் ஒரு முறை உள்ளது. கடந்த காலத்திலும் செயற்குழுவே வேட்பாளரை தெரிவு செய்தது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செயற்குழுக் கூடிய நாங்கள் வேட்பாளரை தெரிவு செய்வோம். அந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் அனைவரும் பாடுபடுவோம்.

எமது கட்சியின் செயற்குழுவில் படித்த புத்திசாலிகள் பலர் இருக்கின்றனர். அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் எவரும் பயப்படத் தேவையில்லை. மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு தீர்மானம் எடுப்போம்.

வெற்றி பெற நாங்கள் சிறந்த கூட்டணியை அமைக்க வேண்டும். சகல கட்சிகள், சகல இனங்கள் அடங்கிய கூட்டணியை உருவாக்க வேண்டும்.

யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியுமா? பல கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். அவர்களின் கோரிக்கை என்ன என்பதை அறிய வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் செயற்பட்ட விதத்தில் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் கூட்டணி அவசியம். குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் கூட்டணி அவசியம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.