ஓர் இனத்தின் அழிவில் மகிழ்ச்சி அடைந்த மற்றைய இனம்! உண்மையை கூறும் அமைச்சர்

Report Print Thileepan Thileepan in அரசியல்

அநுராதபுரம், வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மல்வத்துஓயா தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று விவசாய, மீன்பிடி, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த கடினமான முயற்சி இன்று கைகூடி உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க உழைத்தவர்களில் விஜித முனி சொய்சா, துமிந்த திசாநாயக்க, ரங்கே பண்டாரே என்பவர்களை மறந்துவிடலாகாது.

அதன் பின் அமைச்சர் ஹரிசனின் அயராத முயச்சியினால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒத்துழைப்பு, அங்கீகாரத்துடன் இந்த பிரமாண்டமான திட்டம் உருவாக்கப்பட்டது.

நல்லாட்சி அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட இந்த திட்டம் செயலுருப்படுத்தப்பட வெளிநாட்டு உதவிகள் தாமதமாகியதால் பிரதமர் அரச நிதியை இதற்கு பெற்று தந்துள்ளார்

பல்லாயிரக்கணக்காண விவசாயிகளின் வாழ்விலே வசந்தத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் மக்களின் ஜீவனோப வாழ்விலும் உயர்வை தரும். மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை, வியாயடி, அகத்தி முறிப்பு குளங்கள் உட்பட இன்னும் பல குளங்களுடன் வவுனியா, அநுராதபுரம் ஆகியவற்றில் உள்ள நீர் பாசனக் குளங்களும் இதன் மூலம் நன்மை பெறும்.

2290 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த நீர்ப்பாசனத் திட்டத்தினால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருந்த விவசாயிகள் இரு போகங்களும் தராளமாக செய்கை பண்ணுவதற்கு வாய்ப்பளிக்கிறது.

ஓர் இனத்தின் அழிவில் மற்றைய இனம் மகிழ்ச்சி அடைந்த சூழலே இந்த நாட்டை குட்டி சுவராக்கியது என்ற உண்மையை நாம் இனியாவது உணர்வோமானால் இந்த நாடு விரைவில் சுபீட்சம் காணும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, வசந்த அலுவிஹார, அநுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.