குழப்ப நிலையில் ரணில் தலைமையிலான ஐதேக! கட்சி உறுப்பினர்கள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் 57 உறுப்பினர்களும் தனியாக செயற்படுவதற்கு முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும். மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சஜித் பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் கிடைக்கும் அனைத்து மேடைகளிலும் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகவே அறிவித்து வருகிறார் சஜித்.

இருப்பினும் ரணில் தரப்பினர் இன்னமும் சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. கட்சிக்குள் பெரியளவிலான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மகிந்த தரப்பினர் கருத்துக் கூறிவருகின்றனர். அக்கட்சி மூன்றாக உடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஒரு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் கூட ரணில் தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், சஜித்-கரு- ரணில் மூவரும் விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் அடுத்த வாரத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வினை காண கட்சியின் உயர்மட்டம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்குள் நீடிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாச அணியினர் மாத்தறையில் பாரிய மக்கள் கூட்டம் ஒன்றினை நடத்தி தமது பலத்தை மீண்டும் நிரூபித்திருந்த நிலையில் அன்றைய தினமே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இராப்போசன விருந்துபசாரதிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், இந்த இராப்போசனை நிகழ்விற்கு அமைச்சர் சஜித் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் மேலும் சில முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

எனினும் இந்த நிகழ்வின் போதும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கியமான சில விடயங்கள் கட்சியின் மேலிடத்தில் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பு அமைச்சர் சஜித் பிரேமாதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணி முக்கிய தீர்மானம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் 57 உறுப்பினர்களும் தனியாக தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் மந்திராலோசனை நடத்தியிருந்தும் சஜித் தொடர்பில் அவர் சாதகமான எந்த முடிவினையும் எடுக்கவில்லை என்றும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.