மகிந்த அணிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல்! களத்தில் ஷிரந்தியுமா..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், தற்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கோத்தபாயவிற்கு எதிராக மற்றுமொரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக களமிறங்கியுள்ள கோத்தபாயவிற்கு தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலையின் காரணமாக ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தர்மசங்கடமான நிலைக்கு பொதுஜன பெரமுன அணியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் இறுதிக் கட்டத்தில் இது சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டால் மகிந்த ராஜபக்சவின் தரப்பிலிருந்து மகிந்தவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச களமிறங்குவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த விடயத்தின் காரணமாக கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதில் மகிந்த ராஜபக்சவிற்கு மனத்திருப்தி இல்லை என்பதுடன் ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றன.

அதற்கும் அடுத்தப்படியாக மகிந்தவின் குடும்பத்தினர் இந்த விடயத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இதனால் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்குள்ளேயும் ஒரு சிக்கல் நிலை தோன்றியுள்ளது..

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்கும் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட போது இருந்த ஆதரவு மற்றும் பிரச்சாரங்கள் என்பன தற்போது வெகுவாக குறைவடைந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான ஒரு சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு பல ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவுகள் வலுப்பெற்று வருவதுடன் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களிடத்தில் இருந்து சஜித் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றார்.

பிரதான ஊடகங்கள் பலவும் சஜித் பிரேமதாசவை முன்னிலைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு சஜித் தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இறுதி நேரத்தில் கோத்தபாயவை நிராகரிக்குமாக இருந்தால் அங்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஷிரந்தி ராஜபக்சவிற்கே அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

1994ஆம் ஆண்டிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் களம் காணாத நிலையில் இது ஒரு சவாலான சூழலாக மாறுவதோடு பெண் வேட்பாளர் என்ற ரீதியில் ஷிரந்திக்கு அனுதாப ஆதரவுகள் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளன.

ஒட்டு மொத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி என பலரும் வேட்பாளர்களை களமிறக்கினாலும் இறுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முடிவே ஜனாதிபதியை தீர்மாணிக்கும் சக்தியாக மாறப்போகின்றது.

இப்படியொரு குழப்பகரமான சூழலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக யார் இருக்கப் போகின்றார்? அவ்வாறு கோத்தாவின் வாய்ப்பு பறிக்கப்பட்டால் அவருக்கு மாற்றீடாக ஷிரந்தி களமிறக்கப்படுவாரா என்ற பல கேள்விகள் எழுகின்றன.

Latest Offers