மைத்திரி - சந்திரிக்காவின் இணைவு மற்றுமொரு அரசியல் இணக்கப்பாட்டின் அறிகுறியா

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 வது ஆண்டு நிறைவு மாநாட்டுக்கு அந்த கட்சியின் ஆலோசகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துக்கொண்டமை, அவருக்கு அங்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு என்பன மற்றுமொரு அரசியல் இணக்கப்பாட்டின் அறிகுறி என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்திக்கக் கூட சந்தர்ப்பத்தை வழங்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று அவருடன் மகிழ்ச்சியாக உரையாடியதை காண முடிந்தது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மாநாட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் ஆசனங்களில் இருந்து எழுந்து, சந்திரிக்காவையும் குமார வெல்கமவையும் வரவேற்றனர்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்பட வாய்ப்பிருப்பதபாக அவர் நேற்று கட்சியின் மாநாட்டில் ஆற்றிய உரை மூலம் தெளிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி பெறும் இயலுமை இல்லை எனவும் எனினும் அரச தலைவரை உருவாக்கும் பலம் இருப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரியை தோற்கடிக்க வேண்டுமாயின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த மாநாட்டில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, றிசார்ட் பதியூதீன், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன, கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, எம்.எல்.ஏம்.எம். ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அமைச்சர்களுக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்து இருந்த காரணத்தினால், அவர்களும் கலந்துக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

Latest Offers