சஜித்தின் மற்றுமொரு மிரட்டல்.. அடிபணியுமா ஐதேக?

Report Print Jeslin Jeslin in அரசியல்

வழமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றதோ அதற்கும் அதிகபடியாக ஐதேகவின் சின்னத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

இந்நிலையில், வெகு விரைவில் ஜனாதிபதி தேர்தல் களத்தை சந்திக்க வேண்டிய தருவாயில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவோ அறிவிக்கவோ இல்லை.

இது இவ்வாறிருக்க அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கோரி பல்வேறு கூட்டங்கள் சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அவரது ஆதரவாளர்களாலும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்றையதினம் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் குருணாகலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வெகுவாக குறைந்திருந்தது.

ஐதேகவின் பொதுக்கூட்டங்களில் யானை சின்னம் பொறிக்கப்பட்ட பதாதை, தொப்பிகள் என்பன அநேகமாக பயன்படுத்தப்பட்டு வரும்.

எனினும் நேற்றைய கூட்டத்தின் போது ஐதேகவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படாததை பொதுமக்கள் மத்தியிலும் பிரதான மேடையிலும் காணக்கூடியதாகவிருந்தது.

இதன்மூலம், ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்படாத விடுத்து அவர் ஐதேகவில் இருந்து விலகிச் சென்று பொதுவேட்பாளராக போட்டியிடலாம் என்பதை அறிவிப்பதாக அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொதுவேட்பாளராக எவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கி வெற்றிப்பெற்றாரோ அதே போன்ற ஒரு நிலையில்தான் தற்போது சஜித் பிரேமதாசவும் உள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் கூட அமைச்சர் சஜித் பிரேமதாசவே அனைத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் அவருக்கே அனைத்து முக்கியத்துவங்களும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல கட்சியில் இருந்து பிரிந்துச் சென்று தேர்தலை வெற்றிக்கொண்டதன் பின்னர் மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கக்கூடிய வாய்ப்புக்களும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு உண்டு.

மேலும், ஐதேகவில் இருந்து வெளியேறியுள்ள கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஜோசப் மைக்கள் பெரேரா போன்றோர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்துச் சென்று மகிந்த அணியோடு இணைந்து பிறகு அதிலிருந்தும் விலகிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் மிக விரைவில் அமைச்சர் சஜித்துடன் கைகோர்க்க உள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், ஜனாதிபதித் தேர்தலின் போது அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கான தேர்தல் பணிகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரிடமும் திஸ்ஸ அத்தநாயக்கவிடமும் வழங்கப்படவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

இன்று இரவு வெளியாகப் போகின்ற செய்தியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் அல்லது கட்சியின் தலைவரே களமிறங்கலாம்.

முடிவு எவ்வாறு இருந்தாலும், இறுதியில் கட்சியின் வேட்பாளராகவோ அல்லது பொது வேட்பாளராகவோ அமைச்சர் சஜித் பிரேமதாச களமிறங்குவது உறுதி.

சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கக் கோரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் வழங்கி வரும் அழுத்தங்கள் காரணமாக கட்சியின் தலைமை ஒரு இறுக்கமான நிலையை அடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் பொது வேட்பாளராக களமிறங்க வேண்டிய தவிர்க்க முடியாத முடிவொன்றை அமைச்சர் சஜித் எடுக்க நேரிடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers