தனித்து புதிய கூட்டணியை அமைக்க யோசனை கூறும் சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்காமல், புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்ற யோசனை ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியிடமும், ஜனாதிபதியிடமும் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய கூட்டணிக்கு, ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மாத்திரமல்லாது, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களை தவிர பல சிவில் அமைப்புகளையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து, பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடக்கும் வேட்பாளர் தொடர்பான போராட்டத்தில், சஜித் தரப்பினர் தனித்து போட்டியிட தீர்மானித்தால், அவர்கள் கட்டாயம் இந்த கூட்டணியில் இணைவர்கள் எனவும் சந்திரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சந்திரிக்காவின் இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான இணக்கத்தை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.