ஒழுக்காற்று விசாரணைக்கு சமூகமளிக்காத இரண்டு அமைச்சர்களுக்கு நடக்கப்போவது என்ன?

Report Print Gokulan Gokulan in அரசியல்

அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கட்சித் தலைவரும் பிரமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் குறித்த பிரேரணை ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கினறன.

குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் சமூகமளிக்காத காரணத்தினால் இருவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையென தெளிவாகியுள்ளதாகவும், அதன் பொருட்டு தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீர்மானத்தை எதிர்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது நிறைவேற்றி, அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இதைப் பற்றி எமது செய்திச் சேவை குறித்த அமைச்சர்களிடம் கேட்டபோது தமக்கு இது தொடர்பாக அறிவிக்கவில்லை என தெரிவித்தனர்.