ரணில்தான் போட்டியிடுவார் என வெளியாகும் தகவல்கள்! ஆனால் அனைவரும் என்ன எதிர்பார்க்கின்றனர்?

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவுகளை எடுத்திருக்கின்றார், எனவே ஜனாதிபதி தேர்தலில் அவர் விட்டு கொடுப்பு செய்வதன் மூலம் அவருடைய நிலை உயர்வடையுமே தவிர் கீழ் இறங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு சமயலறை பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர் இது தொடர்பான கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாம் உச்ச கட்டத்தில் இருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் சஜித் பிரேமதாச மக்கள் ஆதரவு கூட்டங்களை நடத்தி வருகின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் போட்டியிடுவார் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சரியான முடிவை எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பங்காளி கட்சிகளும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

விட்டு கொடுப்பை செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து நீண்ட காலத்தின் பின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது சுயவிருப்பத்தின் பேரில், சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வாய்ப்பை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல்களுக்கு எந்த பயமும் இல்லை. இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படவில்லை. வேட்புமனு கோரப்படும் போது, சிறப்பாக ஓடும் குதிரை நிறுத்துவோம்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. பிரச்சினை இருக்கின்றது. எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது சுயவிருப்பத்தின் பேரில் சஜித் பிரேமதாசவுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் கோரிக்கை அது என்பதால், கோரிக்கையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம். உலகில் அல்லது இலங்கையில் சிறந்த தலைவராக நாங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையே ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இதனால், அவர் கட்சி உடைய இடமளிக்க மாட்டார். கட்சியை பாதுகாக்க அந்த தீர்மானத்தை எடுப்பார் என எண்ணுகிறோம். அப்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.

சில நேரம் உதவலாம். அல்லது அவர்கள் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம். இதனால், அது பற்றி தற்போது பேசுவது பொருத்தமானதாக இருக்காது எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.