கோத்தபாய அரசியலில் குதித்ததற்கான காரணம் வெளியானது

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாட்டு பற்று கொண்ட அனைவரும் நாட்டின் எதிர்கால பாதுகாப்பை கருத்திற் கொண்டு தம்முடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலுமாக, தாம் ஒரு போதும் நாட்டின் பாதுகாப்பை கட்டியெழுப்ப தவறியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பலர் அதனை குழப்புவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள்.

அதன் மூலம் நாம் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க போவதாக அவர்கள் கோசம் எழுப்பினர். சற்று சிந்தித்துப் பாருங்கள் நாட்டின் பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியமானது?

நாட்டின் பாதுகாப்பு சீராக காணப்பட்டால் அதன் மூலம் நாட்டு மக்களே பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, நாம் எப்போதும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கியே செயற்படுவோம். எமது ஆட்சியின் போது நாம் யுத்தத்தை முற்றாக நிறைவு செய்தோம். நாட்டில் குண்டு வெடிப்பதை நிறுத்தினோம்.

சுமார் 10 வருடங்கள் நாட்டில் குண்டு வெடிக்காமல் இருந்தது. அது நாம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கியதால் என நான் நினைக்கின்றேன்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பெரிதாக பொருட்படுத்தாமல் செயற்பட்டது. அதன் விளைவாகவே நாட்டில் மறுபடியும் குண்டு வெடிக்கத் தொடங்கியது.

அதன் முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். நாம் எமது புலனாய்வுத்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அந்த நம்பிக்கையே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர உதவியது.

தற்பொழுது நாட்டின் புலனாய்வுத் துறையானது முற்று முழுதாக செயலிழுந்துள்ளது. நாம் புலனாய்வுத் துறையை மீண்டும் கடடியெழுப்பி நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுவடையச் செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.