கோத்தபாயவின் நிகழ்வில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலி பெண் போராளியின் படம்

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ, புலிகளின் சின்னம் உள்ள கொடியையோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையோ பாவிப்பவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயற்சித்த நிலையில் கடந்த வருடம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் நாம் அறிந்ததே.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பொது நிகழ்வொன்றில் அதுவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரான ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டிருந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட புகைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றிலேயே விடுதலைப் புலிகளின் சின்னத்துடனான தொப்பியை அணிந்துள்ள விடுதலைப் புலிகளின் பெண் போராளியின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயமானது அரசியல் அவதானிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் இவ்வாறான விடயங்களை செய்யும் போது அவர்களை கைது செய்வதும், விளக்கமறியலில் வைப்பதுமான சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்க அரசியலில் உள்ளவர்கள் இப்படியொரு விடயத்தை செய்துள்ளமையும், அதனை யாரும் சுட்டிக்காட்டாமையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அப்படியாயின் இலங்கையில் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வெவ்வேறு சட்டங்களா செயற்படுகின்றன? இப்படியொரு பாரபட்சம் எதற்கு என அரசியல் அவதானிகள் வினவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers