கேள்விக்குறியாகும் ரணிலின் எதிர்காலம்....!

Report Print Jeslin Jeslin in அரசியல்

அதிகாரத்தில் இல்லாத போது கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடப்பதும், கட்சிகளுக்கள் பிளவுகள் ஏற்படுவதும், காலைவாரி விடும் சம்பவங்கள் நடப்பதும் வழமை.

பிதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்களில் தோல்வியடைந்து அதிகாரத்தை இழந்து போயிருந்த சந்தர்ப்பங்களில் பல உட்சதிகளையும் குழப்பங்களையும் எதிர்கொண்டிருந்தார்.

ஆனாலும் அதனை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டு கட்சித் தலைமையை தக்க வைத்துக் கொண்டதுடன் இன்றுவரை பிரதமர் பதவியையும் காப்பாற்றி வந்திருக்கின்றார்.

இப்போது ரணில் விக்ரமசிங்க ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலையில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்.

கட்சிக்குள் மாத்திரமன்றி அவரது சமூகத்திற்குள்ளேயே அவர் சவால்களை சந்திக்க ஆரம்பித்திருக்கின்றார். இது அவரது வீழ்ச்சிக்கான அறிகுறியாக இருக்கிறதா அல்லது அவரை இன்னமும் வலுப்படுத்துவதற்கான ஒன்றாக இருக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாக இருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகி ஓய்வெடுக்க வேண்டும் என்று கடந்தவாரம் ஐதேகவின் சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் அதன் தலைவரான உபுல் ஜெயசூரிய கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன 82 வயது வரை ஐதேக தலைவராக இருந்தபோது யாரும் அவரிடம் வெளிப்படையாக இத்தகைய கோரிக்கையை விடுத்ததில்லை. அவ்வாறு கோரும் துணிச்சலும் யாருக்கும் இருந்ததில்லை.

ஆனால் 70 வயதிலேயே ரணில் ஓய்வெடுக்க வேண்டும் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஜே.ஆர் ஜயவர்த்தன தனது 70களில் தான் நிறைவேற்று அதிகாரத்தையே கைப்பற்றினார். அவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தபோது அவருக்கு எதிராக துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.

ஆனால் ரணில் 70களின் தொடக்கத்தை எட்டி விட்டாலும் அவருக்கு இன்னமும் நிறைவேற்று அதிகாரம் வசப்படவில்லை. பிரதமர் பதவியை அடைந்த திருப்தியுடன் அரசியலை விட்டு வெளியேறுவது அவருக்கு உவப்பான ஒரு விடயமாகவும் தெரியவில்லை.

அதனால்தான் அவர் இன்னமும் அரசியல் மைதானத்தில் இருந்தே ஆடே எத்தணிக்கின்றார்.

ஆனால் கட்சிக்குள் வளர்ந்து விட்ட பல தலைவர்கள் அவரது இடத்தைக் குறி வைத்திருப்பதால் ரணில் விக்ரமசிங்கவுக்கு எப்போதும் தலைவலி இருந்து கொண்டே இருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்கவை ஓய்வு பெறுமாறு சட்டத்தரணி உபுல் ஜெயசூரிய கோரிய அடுத்தடுத்த நாட்களிலேயே நடந்தேறிய ஒரு சம்பவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

களனிய ரஜமகா விகாரையின் அறங்காவலர் சபையின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குகின்ற ஒரு தீர்மானம் குறித்த சபையின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது.

2020 பெரஹரவை நடத்துவது தொடர்பாக ஆராயும் தாயக்க சபா கூட்டத்தில் அதன் தலைவராக ரணில் விக்ரமசிங்க சரியாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் முன்வைத்தார். அதனை இன்னொருவர் வழிமொழிந்தார்.

அதையடுத்து களனிய ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அவ்வாறாயின் ரணில் விக்ரமசிங்க இந்தப் பதவியில் இருப்பதை விரும்புவோர் கை உயர்த்துமாறு ஒரு கோரிக்கை முன்வைத்தார்.

300 பேருக்கு மேல் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் 7 பேர் மாத்திரமே கை உயர்த்தினர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை தாயக்க சபாவின் நிறைவேற்றுக் குழுவுக்கு அனுப்புவதாகவும் விகாராதிபதி கூறினார்.

திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த ரணிலுக்கு இந்த தகவல் கிடைத்திருந்தது. அடுத்த நாள் காலையில் மாலைதீவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் களனிய ரஜமகா விகாரையின் விகாராதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இது ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம். களனிய ரஜமகா விகாரை, ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப வழியினராலேயே கட்டப்பட்டது. எனவே அவரது செல்வாக்கு அங்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது.

அதன்படிதான் 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு களனிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி ஆரவு தெரிவித்திருந்தார்.

இப்போது அவர் கோத்தபாய ராஜபக்சவின் பக்கம் திரும்பியிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்சவும் களனிய விகாரையின் விகாராதிபதியும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்றும் சொல்லப்டுகின்றது.

ஆகஸ்ட் 11ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் கோத்தபாய ராஜபக்ச முதலில் சென்று வழிபாடு நடத்தியது களனிய ரஜமகா விகாரையில்தான்.

இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆட்சி அதிகாரத்தில் ரணில் விக்ரமசிங்க இருந்தாலும் அவரை இலகுவாகப் பதவியில் இருந்து தூக்கி விடும் துணிச்சல் களனிய ரஜமகா விகாரையின் தாயக்க சபாவுக்கு வந்திருக்கின்றது.

இது ரணில் விக்ரமசிங்கவின் சமூகத்தினராலேயே அவர் ஒரு இலகுவான இலக்காக பார்க்கப்படுகின்றார். தூக்கி வீசப்படுகின்றார் என்பதைக் காட்டுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள பலவீனமான அதிகாரமோ கோத்தபாய ராஜபக்ச பலமான அதிகாரம் கொண்டவராக மாறுவார் என்ற எதிர்பார்ப்போதான் இவ்வாறான ஒரு நிலைமைக்குக் காரணம்.

பிரதமர் பதவியை விட தாயக்க சபா தலைவர் என்பது பெரிய பதவியல்ல. ஆனாலும் அந்த சபா நாட்டின் பிரதமரைக் கூட தூக்கியெறிவோம் என்பதை காட்டியிருக்கின்றது.

அது ஒரு புறமிருக்க தாயக்க சபா பதவிகளைக்கூட சரியாக தக்கவைத்துக் கொள்ள முடியாத தலைவராக சிங்கள மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்கள் மத்தியில் பெறுமானமற்ற அல்லது கவர்ச்சியற்ற ஒரு தலைவராக மாறி வருகின்றார் என்பதற்கான ஒரு எடுகோளாக இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் சிலருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.

ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை பற்றிய கேள்விகளைப் பரவலாக எழுப்பியிருக்கின்றது என்பதே உண்மை. ரணில் விக்ரமசிங்க அரசியலில் நரி என்று அழைக்கப்படுபவர். அதேவேளை முதுகெலும்பில்லாத தலைவர் என்றும் சொல்லப்படுபவர்.

ரணில் விக்ரமசிங்க அரசியலை இராஜதந்திரத்துடன் கையாண்டு வருபவர் தனது எதிரிகளையும் மடக்கிப் போடுபவர். கடந்த நான்கரை ஆண்டுகளில் ராஜபக்சவினர் எவரும் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கும் அவரே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் ரணில் விக்ரமசிங்கவே காப்பாற்றி வருகின்றார் என்று அரசியல் மட்டங்களிலும் ஊடக மட்டங்களிலும் குற்றச்சாட்டுக்கள் உலாவுகின்றன.

ஆனாலும் அதனை நிரூபிக்க யாராலும் முடியவில்லை. அதேவேளை, அது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவரால் உறுதியாக நிராகரிக்க முடியவில்லை. இவ்வாறான ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கப் போய் தான் ரணில் விக்ரமசிங்க இப்போது முட்டுச் சந்து ஒன்றில் சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்த வரையில் களனிய ரஜமகா விகாரையின் பொறுப்பில் இருந்து விலக முன்வந்தது போல அரசியல் பதவிகளிலிருந்து இலகுவாக வெளியேறும் ஒருவராக இல்லை.

அவர் தனது அதிகாரத்தை தக்கவைப்பதிலேயே குறியாக இருப்பவர். அதனால் தான் இன்றுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகின்றார். பிரதமர் பதவி வரை பார்த்து விட்ட அவருக்கு நிறைவேற்று அதிகாரத்தையும் ருசித்துப் பார்த்து விடும் ஆவல் வந்திருந்தால் அது ஆச்சரியமானதல்ல.

ஆனால் துரதிஸ்டவசமாக ஐதேகவுக்குள் இருந்தே அவரை வெளியே அனுப்புவதற்கு ஆட்கள் உருவாகத் தொடங்கியுள்ளது போலவே சிங்கள பௌத்த சமூகத்திலிருந்தும் அவரை வெளியே அனுப்பும் கைங்கரியங்களும் நடந்து கொண்டுள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்ரமசிங்க கௌரவமான ஓய்வை நோக்கி செல்லப் போகின்றாரா இல்லை ஜே.ஆர்.ஜயவர்த்தனவைப் போன்றே தனது 70களில் நிறைவேற்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தீவிர போராட்டத்தில் இறங்கப் போகின்றாரா விரைவிலேயே அது தெரிந்து விடும்.

- Virakesari