ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐ.தே.கவின் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்!

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில், சபாநாயகர கரு, அமைச்சர் சஜித், நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கூடும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தை அச்சுறுத்தியோ எச்சரிக்கை விடுத்தோ தட்டிப்பறிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த கட்சிக்குள் எற்பட்டுள்ள முரண்பாடுகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பலரும் கோரி வருகின்ற நிலையில், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசுகையில்,

“பிரதமர் ரணில் -அமைச்சர் சஜித் பேச்சுவார்த்தையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தை அச்சுறுத்தியோ எச்சரிக்கை விடுத்தோ தட்டிப்பறிக்க முடியாது.

அதேபோல் கட்சிக்குள் ஒருபோதும் பிளவும் ஏற்படுத்த முடியாது. சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிகளை எடுக்கலாம். சில கற்பனைகளை கொண்டு சிலரது பேச்சுக்களை கேட்டு கட்சியை பிளவுபடுத்த முடியும்.

ஆனால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கட்சிக்குள் எப்போதுமே ஜனநாயக ரீதியிலான நகர்வுகளுக்கு முதலிடம் உள்ளது.

எவரும் எந்தக் கருத்துக்களையும் கூற முடியும், ஆனால் அது கட்சியையோ ஆதரவாளர்களையோ பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு” என அவர் மேலும் கூறியுள்ளார்.