சஜித் பிரேமதாசவுக்கே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கின்றது!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மீறி தான் எந்த சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கட்சியின் விதிகளை மீறிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜித் பி.பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு கடிதம் ஊடாக விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று காலை கட்சியின் தலைமையகத்துக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜய சூரிய மற்றும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பவர்களில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

நான் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும், செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கட்சியின் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மீறியதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜிவ சேனசிங்க மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும், தன்மீதான குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இதுவரை விளக்கமளிக்கவில்லை.