ஐ.தே.வில் உச்சம் தொட்டுள்ள மோதல்! ரணில் - சஜித் இன்று சந்தித்து பேசுகின்றனர்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கும் முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கட்சிக்குள் உருவாகி இருக்கும் முறுகல் நிலையை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தனியாக ஞாயிறு இரவு சந்திக்கவிருந்தனர்.

எனினும், அந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவும் சிக்கல் நிலைக்கு உரிய தீர்வு எட்டப்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

நேற்ற இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சர்வாதிகார கட்சியாகும்.ஆகவே,எந்த வாய்ப்புக்களும் இன்றி அவர்களுடைய ஜனாதிபதி வேட்பாளரை இலகுவில் அறிவித்து விட்டார்கள்.

ஆனாலும் ஐக்கியதேசிய கட்சியில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை.வேட்பாளராக களம் இறங்குவதற்கான கோரிக்கையை யார் வேண்டுமாயினும் முன்வைக்கலாம்.

ஏனெனில் அதற்கான ஜனநாயக உரிமை கட்சிக்குள் பேணப்படுகின்றது” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.