விடாப்பிடியாக இருக்கும் சுதந்திரக் கட்சி: இணங்க மறுக்கும் பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையிலான பொதுக் கூட்டணி உருவாகினால், அந்த கூட்டணி பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட எந்த வகையிலும் இணங்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுக் கூட்டணி என்றால், இரண்டு கட்சிகளும் நடுநிலை கொள்கைக்கு வர வேண்டும். எந்த கட்சியும் மற்றுமொரு கட்சியின் கிளையாக மாறக் கூடாது. மொட்டுச் சின்னத்தை தவிர்த்து, வெற்றிலை, நாற்காலி அல்லது வைரக்கல் என எந்த சின்னத்தை வைத்தாலும் சுதந்திரக் கட்சி அதனை ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் எந்த நிலைமையாக இருந்தாலும் தமது சின்னத்தை மாற்ற போவதில்லை என பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பொதுக் கூட்டணியை ஏற்படுத்தினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சின்னத்தை மாற்றுவது சம்பந்தமாக அந்த கட்சி எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான வாக்காளர்கள் மொட்டுச் சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால், எந்த வகையிலும் சின்னத்தை மாற்ற தயாரில்லை. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட நேரிடும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.